நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படலாம் என்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை அடுத்து மீளத்திறக்கப்பட்ட கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் தற்போது எவருமே இல்லாதபோதும் அங்கு பணிபுரிவதற்கு 140 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலிலுள்ள அகதி முகாம்களுக்கு பாதுகாப்பு வழங்கிவரும் பிரிட்டனை தளமாகக்கொண்ட "சேர்க்கோ" நிறுவனத்தின் 140 உத்தியோகத்தர்கள் இவ்வாறு யாருமில்லா கிறிஸ்மஸ் தீவு அகதி முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கபட்டிருக்கிறது.
மருத்துவ தேவைகளை காரணம்காட்டி மனுஸ் - நவுறு தீவு அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிடுவார்கள் என்ற அச்சம் பெருமளவில் அரசினால் பரப்பப்பட்டபோதிலும் இதுவரை ஒரே ஒருவர் இது தொடர்பான சட்டம் இயற்றப்பட்ட பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார். இன்னும் மூவர் கொண்டுவரப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு வந்து மருத்துவ உதவிகளை பெறுவதற்கு மேலும் 70 பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், இவை எவையும் நடைபெறுவதற்கு முன்னர் பெருந்தொகையான நிதியை ஒதுக்கி, பெருமளவிலான பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அகதி முகாம்களுக்கு அனுப்பி அரசாங்கம் அரசியல் வேடிக்கை காண்பித்துவருகிறது என்று அகதிகள் நல அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டிருக்கின்றன.
