ஆட்டிறைச்சி உண்பதை ஊக்கப்படுத்தும் ஆஸ்திரேலிய விளம்பரத்தில், இந்துக் கடவுட்களில் ஒருவராக வணங்கப்படும் விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் வந்த முறைப்பாடுகளை, The Advertising Standards Bureau தள்ளுபடி செய்துள்ளது.
Meat and Livestock Australia என்ற நிறுவனத்தின் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் அமைந்த புதிய வீடியோ விளம்பரத்தில், ஏனைய மதத்தினர் வணங்கும் கடவுட்கள் மற்றும் இறைதூதர்களோடு, விநாயகர் போன்ற வேடமணிந்த ஒருவரும் பங்கேற்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விளம்பரமானது இந்து மதத்தவர்களை அவமதிப்பதாகவும், அவர்களது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளதாக பல இந்து அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், இவ்விளம்பரம் தொடர்பில் இந்தியா சார்பில் உத்தியோகப்பூர்வமாக முறையிடப்பட்டது.
ஆனால் மத இன வேறுபாடு எதுவுமின்றி அனைவரும் உண்ணக்கூடிய ஒரு உணவு என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவே தாம் அந்த விளம்பரத்தை அமைத்திருந்ததாகவும், எவரது மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் நோக்கம் தமக்குக் கிடையாது என்றும் Meat and Livestock Australia நிறுவனம் தனது செயற்பாட்டை நியாயப்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் குறித்த விளம்பரம் தொடர்பில் தமக்கு வந்த முறைப்பாடுகளை ஆராய்ந்த The Advertising Standards Bureau என்ற விளம்பரங்களை நெறிப்படுத்தும் வாரியம், இந்த விளம்பரம் தமது விதிமுறைகளை மீறவில்லை எனக் கூறியுள்ளது.
The Advertising Standards Bureau-இன் முடிவு ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள The Hindu Council of Australia, Meat and Livestock Australia-க்கு எதிராக நாடு தழுவியரீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
