ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு வீட்டு விலைகள் மீண்டும் உயரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக பொருளாதார ஆலோசகர் ஒருவர் எதிர்வுகூறியுள்ளார்.
தேசியளவில் கடந்த 18 மாதங்களாக வீட்டு விலைகளில் ஏற்பட்ட பாரதூரமான வீழ்ச்சி 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் ஸ்திரமாகும் என்றும் அடுத்த வருட ஆரம்பளவில் வீட்டு விலைகள் வளர்ச்சியடைவதற்குக்கூட வாய்ப்புக்கள் உண்டு என்றும் HSBC வங்கி பொருளாதார ஆலோசகர் Paul Bloxham கூறியுள்ளார்.
வீட்டு ஏலங்களின்போது கொள்முதல் செய்யப்படுகின்ற வீடுகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருவதாகவும் நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே வீடு விற்பனை ஆரோக்கியமான நிலையில் காணப்படுவதாகவும் Paul Bloxham மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய ரிசேர்வ் வங்கி அடுத்த வாரம் கடன்கள் மீதான வட்டி வீதத்தை குறைக்கவுள்ளமை மற்றும் முதல் தடவையாக வீடுகளை கொள்முதல் செய்பவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள் மற்றும் மானியங்களின் அடிப்படையில் வீடுகள் அதிகம் கொள்முதல் செய்யப்படும் நாட்கள் விரைவில் வருவதற்கான போதிய அறிகுறிகள் தென்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.