ATO-வரித்திணைக்கள அதிகாரிகள் என்ற போர்வையில் மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tax return செய்யும் நேரம் வந்துள்ள நிலையில் இதுவரை 17 ஆயிரம் பேரிடமிருந்து மோசடி குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது இன்னமும் அதிகரிக்கலாம் எனவும் ATO தெரிவித்துள்ளது.
கடந்தவருடம் ஜுலைக்கும் அக்டோபருக்கும் இடையில் மட்டும் 48 ஆயிரம் முறைப்பாடுகள் ATO-க்கு கிடைத்துள்ளது.
குறிப்பாக ATO விலிருந்து தாம் அழைப்பதாகக்கூறி நீங்கள் ஒரு தொகைப்பணத்தை இன்னமும் கட்டவில்லை என்றும், அதைக் கட்டாவிட்டால் கைதுசெய்யப்படுவீர்கள் எனவும் யாராவது கூறினால் அதை நம்ப வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ATO ஒரு போதும் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டல் விடுக்காது என்பதுடன், தவறான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே சந்தேகத்திற்கிடமான முறையில் ATO-விலிருந்து அழைப்பதாகக்கூறி உங்கள் தனிப்பட்ட விபரங்களையோ அல்லது பணம் செலுத்துமாறோ கேட்டால் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள்.
கடந்த பல மாதங்களாக ஒருவர் 900,000 டொலர்கள் வரை மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ATO, ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தாலோ அல்லது நீங்கள் மோசடிக்காரர்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உணர்ந்தாலோ 1800 008 540 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளது.
