அண்மையில் இடம்பெற்ற 62ஆவது Annual Grammy Awards நிகழ்வின் போது, அமெரிக்காவின் முன்னாள் First Lady முதல் பெண்மணி Michelle Obama வுக்கு Best Spoken Word Album த்திற்கான விருது வழங்கப்பட்டது. ஆமாம். அவர் எழுதி வெளியிட்ட best seller நூலான “Becoming” என்ற நூலின் ஒலிவடிவ பிரதியை, அவர் தனது சொந்த குரலில் பதிவு செய்து வெளியிட்ட audio book - ஒலி நூலுக்காக இந்த Grammy Award அவருக்கு வழங்கப்பட்டது.

நூலின் உள்ளடக்கத்திற்காகவும் கேட்டல் இன்பத்திற்காகவும் நூலின் ஆசிரியரைக் கொண்டு அல்லது வேறு ஒருவரைக் கொண்டு அதை ஒலிவடிவில் பதிவுசெய்து audio book ஆக வெளியாகும் நூல்கள் இன்று எண்ணற்றவை.
அதே நேரத்தில் பல பழைய நூல்களும் பிரதானமாக காலங்காலமாக நாம் கொண்டாடிவரும் classics என்ற வகை நூல்களும் சிறுவர்க்கான இலக்கியங்களும் இன்று audio books வடிவில் வந்துகொண்டிருக்கின்றன.
1877 இல் Thomas Edison குரல் ஒலிப்பதிவை அறிமுகப்படுத்தியபோது இப்படிச்சொன்னார்: ‘இந்த தொழில் நுட்பம் காரணமாக, புத்தகங்கள் வாசிக்கப்படுதல் என்ற கட்டத்தைத் தாண்டி, கேட்கப்படுதல் என்ற கட்டத்திற்குள் நுழையும்; கண்களையும் கைகளையும் வேறு காரியங்களுக்காக பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படும்போது, கேட்கும் புத்தகங்கள் உள்ளே நுழையும்’ என்றார் அவர்.
எழுத்து வடிவத்தில் அமைந்த நூலை, ஒலிவடிவில் பதிவு செய்வது, 1930 தொடக்கம் நிகழ்ந்து வந்தாலும், பெரும்பாலும் அவை சிறுவருக்கான கதைகளாகவோ அல்லது பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான, பிரத்தியேகமான சிறு நூல்களாகவோதான் இருந்தன. அவற்றைக்கேட்க, அதற்கான record player, அல்லது tape recorder, அல்லது பெரிய உபகரணங்கள் தேவைப்பட்டன என்பது மட்டுமல்ல, பெரும்பாலும் அவை குறுகிய 30 அல்லது 40 நிமிட பதிவுகளாகவே இருந்தன.
Vinyl records என்ற இசைத்தட்டில் முதலில் 1932 இல் நுழைந்த ஒலி நூல்கள், பின்னர் ஒலி நாடவிலும், அதன் பின்னர் compact disc என்ற குறுந்தகட்டிலும் படிப்படியாக இடம்பிடித்தன.
ஆனால் இன்று, smart phone மற்றும் tablet கணிணிகளின் செளகர்யம் காரணமாக 800 அல்லது 1000 பக்கங்களைக் கொண்ட ஒரு audio book ஐ தரவிறக்கம் செய்து, விரும்பியபோது கேட்கலாம். Kindles, Amazon, Google, Apple போன்ற பெரு நிறுவனங்கள், audio book விற்பனையில் தங்களது சந்தைப்பங்குக்காக போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் Barack Obama எழுதி, சில மாதங்களுக்கு முன் வெளிவந்த அவரது நினைவுக்குறிப்புகள் ‘Promised Land’ என்ற பெயரில் வெளியானது. இது சுமார் 800 பக்கங்களைக் கொண்ட நூல். இதன் audio book, 29 மணித்தியாலம் நீண்ட ஒலிப்பதிவாகும். இதை Barack Obama வின் தனித்துவமான, ஆழமான, கேட்பவரைக்கட்டிப்போட்டுவிடும் அவரது குரலில் கேட்பது ஒரு அனுபவமாகும்.
காதில் earphone ஐ அல்லது earbud ஐ மாட்டிக்கொண்டால், யாருக்கும் தொந்தரவில்லை. Obama உங்கள் முன் அமர்ந்து உங்களுக்காகவே தனது அனுபவத்தைச் சொல்வதுபோன்ற ஒரு அன்னியோன்யத்தை இது ஏற்படுத்துகிறது. வேண்டுமான இடத்தில் நிறுத்திக்கொள்ளலாம்; விளங்காத பகுதிகளை re-wind செய்து திரும்பக் கேட்கலாம் . காலையில் நடக்கப்போகும்போது, வீட்டினுள் அல்லது வெளியே சிலபல செயல்பாடுகளில் ஈடுபடும்போது, ஏன் கார் ஓட்டும்போது, எங்கு வேண்டுமானாலும் கேட்கலாம். இந்த சௌகர்யம் காரணமாக இப்போது ஏராளமான நூல்கள் ஒலி வடிவில் வெளிவருகின்றன. சென்ற வருடம் audio books களின் சந்தைப்பங்கு 350 கோடி அமெரிக்க டாலர்களாகும்.

Audio books இன் வரவு காரணமாக புத்தகங்களின் விலை பெரிய அளவில் குறைந்திருக்கிறது. உதாரணமாக Hard cover edition என்ற கனதியான அட்டையைக் கொண்ட நூல் ஒன்று 50 டாலர்களுக்கு விற்பனையானால், அதன் paper back என்ற மெல்லிய காகிதத்தால் ஆன பிரதியை சுமார் 30 டாலர்களுக்கு வாங்கலாம். அதே நேரத்தில் அதன் ebook என்ற மின்நூல் என்ற வடிவத்தை சுமார் 20 டாலர்களுக்கு தரவிறக்கிக் கொள்ள முடியும். அதன் audio book என்ற பேசும் நூல் பிரதியைச்சுமார் 12 டாலர்களுக்கு இப்போது தரவிறக்கிக் கொள்ள முடியும் அல்லது streaming என்ற முறையில் வானொலியில் கேட்பதுபோல் கேட்க முடியும்.
சரி. Audio books உங்களுக்கு சரிப்பட்டுவருமா என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் அப்படித்தானே?
‘The untold history of talking books’ என்ற நூலின் ஆசிரியர் Matthew Rubery இப்படிச்சொல்கிறார். ‘Audiobooks என்பது வாசிப்பதை வெறுப்பவர்க்கானது; அதேநேரத்தில் வாசிப்பதை விரும்புபவர்களுக்கானது.’ என்கிறார் அவர்.
நாம் காலங்காலமாக கதை கேட்டு வளர்ந்தவர்கள். கதைமட்டுமல்ல, வரலாறு, பயணம், சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் சந்ததி சந்ததியாக செவிவழியே பரிமாறப்பட்டவை. ஆனால் அவை கால ஓட்டத்தில் பலவிதமாக திரிபு பெற்றதைத் தவிர்க்கமுடியவில்லை. இப்போது சொல்வாருமில்லை; கேட்பாருமில்லை. அந்த இடத்தை நிரப்புகிறது audio books- பேசும் நூல்கள்.
Audio books - பேசும் நூல்கள், எழுத்து வடிவினதான நூலுக்கு அல்லது பதிப்பிக்கப்பட்ட நூலுக்கு இணையாகுமா என்ற கேள்வி எழுவது இயல்பு. இது தொடர்பாக இதுவரை செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சிகள், சாதாரண வாசகனுக்கு, இரண்டுமே ஒரேவிதமான கிரகிப்பு, மற்றும் நினைவிலிருத்திக்கொள்ளும் ஆற்றலையே தருகின்றன என்றே சொல்கின்றன.

எழுத்துவடிவ நூலை வாசிக்கும்போது வேறு ஒரு செயலையும் செய்ய முடியாது. audiobooks கேட்கும்போது கவனம் அதிகம் தேவைப்படாத அல்லது நல்ல பயிற்சிபெற்ற பல அலுவல்களைச் செய்ய முடியும் என்பதும் மேலதிக நன்மையாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கனமான புத்தகங்களைக் கையில் சுமந்து கொண்டு வாசிக்கும்போது கைகளுக்கு சோர்வு ஏற்படுகிறது; தொடர்ந்து வாசிக்கும்போது கண்களுக்கும் சோர்வு ஏற்படுகிறது. இதற்கு மாற்று வழி- நிச்சயமாக audio books தான்.
ஆயிரக்கணக்கான audio books கள் ஆங்கிலத்தில் வெளிவருகின்றன. தமிழில் audio books பேசும் நூல்கள் இருக்கின்றனவா?
ஆம் . காலத்தால் மறக்கப்படாத பல உன்னதமான நூல்கள் இப்போது ‘தமிழ் ஒலிப்புத்தகம்’ என்ற அமைப்பில் கிடைக்கின்றன. அத்தோடு இவற்றை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளவும் முடியும். சில புத்தகங்களை தரவிறக்கம் செய்யாமல் streaming என்ற முறையிலும் கேட்கமுடியும். இந்த தளத்தில் அமரர் கல்கி அவர்களின் ‘புதுவெள்ளம்’, ‘சுழல்காற்று’, ‘கொலைவாள்’, ‘பொன்னியின் செல்வன்’ ‘தியாகசிகரம்’ போன்ற பல நூல்கள் கிடைக்கின்றன.
கதை ஓசை என்ற தளத்தில் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, டாக்டர் உ.வே. சாமிநாதய்யரின் என்சரித்திரம் என்பனவும், மற்றும் ல. ச. ராமாமிருதம், தி. ஜானகிராமன், கு.பா.ராஜகோபாலன், நா. பார்த்தசாரதி என்று பல ஜாம்பவான்களின் நாவல்களும் கிடைக்கின்றன.

பிரபல Amazon தளத்தில் பொன்னியின் செல்வன், பார்திபன் கனவு,கள்வனின் காதலி, ஜெயகாந்தனின் அக்னி பிரவேசம், யாருக்காக அழுதான், சாண்டில்யனின் கடல்புறா, புதுமைப்பித்தன் சிறுகதைகள், திருக்குறள், பகவத்கீதை என்று ஏராளமான நூல்கள் audio வடிவில் இருக்கின்றன. Trial என்ற முறையில் முதல் புத்தகம் இலவசமாக கிடைக்கிறது. அதன் பின் உதாரணமாக, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நாலரை ஆஸ்திரேலிய டாலர்கள். இவற்றை podcast என்ற முறையிலும் streaming என்ற முறையிலும் கேட்க முடியும். இதைத்தவிர பல தளங்கள் இலவசமாக தமிழ் நூல்களை வழங்குகின்றன. பல தளங்கள் samples என்ற மாதிரிகளை அனுப்பி வைக்கின்றன.
Apple தளத்திலும் பல தமிழ் நூல்கள் கிடைக்கின்றன. ஆனால் ஆங்கிலத்தில் அல்லது வேறு பல மொழிகளில் கிடைப்பது போன்று புதிய நூல்கள் தமிழில் பெரும்பாலும் வரவில்லை என்றாலும் இதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
தமிழில் ஒரு கால கட்டத்தில் கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், தி.ஜானகிராமன், சாண்டில்யன் போன்றவர்களின் அடுத்த நாவலுக்காக லட்சக்கணக்கானோர் காத்திருந்த நிலை இருந்தது. அந்த நிலை குறிப்பாக எந்த எழுத்தாளருக்கும் இப்போது இல்லை. ஆங்கில மொழியைப் பொறுத்த அளவில், இப்போதும் சுயசரிதைகள், மற்றும் பிரபல எழுத்தாளர்களின் நூல்கள் தொடர்பாக பெரிய எதிர்பார்ப்பு உண்டு. ஆகவே பதிப்பிக்கப்பட்ட, மற்றும் ebook வடிவில் அமைந்த நூல்கள் மட்டுமல்ல audio books என்ற பேசும் நூல்களுக்காகவும் லட்சக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள்.
வாசிக்க முடியவில்லை அல்லது போதுமான அளவு வாசிக்க நேரமில்லை என்பவர்களுக்கு audiobooks- பேசும் நூல்கள் ஒரு வரப்பிரசாதம்.
