ஆஸ்திரேலியா தினம் என்பது இந்த நாட்டின் விழுமியங்கள், சுதந்திரங்கள் மற்றும் பொழுதுபோக்குகளைக் கொண்டாடும் ஒரு நாள் என்றுதான் பலருக்குத் தெரியும். ஆஸ்திரேலியா தினம், பரவலாக மக்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறி விட்டாலும் இந்தத் தினத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்று ஒரு வரையறை கிடையாது என்பதும் உண்மைதான். வீட்டு முற்றத்தில் BBQ கள், துணைவருடனும் நண்பர்களுடனும் மது அருந்தி, ஆஸ்திரேலியக் கொடியைப் பெருமையுடன் பறக்க விட்டு, கொண்டாடும் நேரம். ஆஸ்திரேலிய தினத்தன்று பேரணிகள் மட்டுமல்லாது, பலருக்கு குடியுரிமையும் வழங்கப்படுகிறது.
பல பூர்வீக குடி மக்களுக்கு, இந்த நாள் மிகவும் வித்தியாசமான உணர்வுகளை உண்டாக்குகிறது. பிரித்தானிய காலனித்துவ படையெடுப்பின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்த நாள் பலருக்கும் துக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் படையெடுப்புகளின் விளைவாக போர், இனப்படுகொலை, இனவெறி மற்றும் பூர்வீக குடி மக்களுக்கு எதிரான பிற அட்டூழியங்கள், பல தலைமுறைகளாக நடந்ததை, நடப்பதை நினைவுபடுத்துகிறது.
இந்தப் பின்னணியில், புதிதாகக் குடியேறிய மற்றும் இங்கு வாழும் புலம்பெயர்ந்த மக்கள் பலர் இந்நாட்டின் குடியுரிமை பெற்றதைக் கொண்டாடுவார்கள்.
கப்பல் மூலம் இங்கு வந்திறங்கிய பிரித்தானியர்களின் வருகையைக் குறிக்கும் ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டுமா என்ற பின்னணியில், பல கலாச்சார பின்னணியுடன் இங்கு குடியேறியவர்கள் ஆஸ்திரேலியக் கொடியின் கீழ் ஒற்றுமையைக் கொண்டாடும் நாளாக இருக்க வேண்டுமா என்று கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.
“நாமும் இதில் பங்காளிகள் என்ற உணர்வை வளர்க்க வேண்டும்”
கடந்த (2021 ஆம் ஆண்டு) மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, (பிறப்பிடம் குறிப்பிடப்படாதவர்களைத் தவிர) ஏழு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அல்லது இந்நாட்டின் மக்கள்தொகையில் 29.3 சதவீதமானவர்கள், வெளிநாட்டில் பிறந்தவர்கள்.
எத்தியோப்பியாவிலிருந்து இங்கு குடியேறி, தற்போது சிட்னியில் வாழும் Assefa Bekele, பூர்வீக குடி மக்களுடன் இணைந்து பணியாற்றியவர், அத்துடன் பூர்வீக குடி மக்களின் வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
ஒரு சமூகம் அல்லது ஒரு தேசம் என்ற உணர்வை மக்களிடம் வளர்ப்பது மிகவும் முக்கியம் என்கிறார் அவர்.
“ஒவ்வொரு தனிநபருக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் - குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து குடிவந்தவர்கள் மற்றும் 60,000 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்த பூர்வீக குடி மக்களுக்கும் இந்நாடு சொந்தமானது என்ற உணர்வு இருக்க வேண்டும்,” என்று Assefa Bekele கூறினார்.
“வரலாறு, கலாச்சாரம் என்று அனைத்தையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒற்றுமை உணர்வை உண்மையில் வளர்ப்பது நல்லது.”
ஆஸ்திரேலிய தின தேதியை மாற்றுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. காலம் மாறிக்கொண்டே இருக்கிறது, அதனுடன் மக்களும் மாற வேண்டும்.”
ஆஸ்திரேலியா ஒரு பன்முக பல்கலாச்சார நாடு. ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் ஒவ்வொரு பகுதியும் மதிக்கப்பட வேண்டும்.Assefa Bekele
“கூட்டிக் கழித்துப் பார்த்தால், நம் அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை மட்டுமே தேவை.”
“கொண்டாடுவதற்குப் பொருத்தமற்ற நாள்”
Butchulla மற்றும் Gubbi Gubbi பின்னணி கொண்ட Gavin Somers, ஒரு பாடகர் மற்றும் பாடலாசிரியர். ஆஸ்திரேலியாவைக் கொண்டாட, ஒரு நாள் தேவை என்பதன் முக்கியத்துவத்தையும், ஆஸ்திரேலியராக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் ஒப்புக்கொள்கிறார். இருந்தாலும், தற்போது அதனைக் கொண்டாடும் நாள், கொண்டாட்டத்திற்கு உகந்த நாள் அல்ல என்று அவர் கூறுகிறார்.
“நாம் பெருமையுடன் கொண்டாடக்கூடிய ஒரு நாளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும், இங்கு வாழும் பிற பன்முக பல்கலாச்சார குழுக்கள் - எங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கொண்டாடக் கூடிய நாளாக அது இருக்க வேண்டும்,” என்று Gavin Somers கூறினார்.
“நாம் அனைவரும் இணைந்து கொண்டாடக்கூடிய ஒரு நாளில் நாம் இதனை சேர்ந்து கொண்டாடுவது உண்மையில் முக்கியம்.”
சில கடினமான கேள்விகளை ஆஸ்திரேலியா தினம் கேட்க வைக்கிறது
Ngarrindjeri மற்றும் Kaurna பூர்வீக குடியை சேர்ந்த KWY என்ற இலாப நோக்கற்ற, பூர்வீக குடி மக்களால் நடத்தப்படும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Craig Rigney, ஆஸ்திரேலியா தினம் தொடர்ந்தும் சங்கடமான கேள்விகளை எழுப்புகிறது என்று கூறுகிறார்.
“நாம் ஒருவரையொருவர் எப்படிப் பார்க்கிறோம், என்ற கேள்வியை நாம் எல்லோரும் கேட்க வேண்டிய நேரம் இது”Craig Rigney
“ஒளிமயமான எதிர்காலம் எம் கண்களில் தெரிகிறதா?” என்று Craig Rigney கேள்வி எழுப்பினார்.
“ஒருவரையொருவர் எப்படி நடத்துகிறோம் என்பதை மட்டுமின்றி எமது எதிர்காலத்தை இது தீர்மானிக்கும் என்று நான் நினைக்கிறேன்.”

சில மாநிலங்களில், உள்ளூராட்சி மன்றங்கள் குடியுரிமை வழங்குவதையும் ஜனவரி 26 அன்று நிகழ்வுகளை நடத்துவதையும் நிறுத்தியுள்ளன. மெல்பன் நகரின் வடக்குப் பகுதியிலுள்ள Merri-Bek நகர சபை, Kulin தேசத்தின் Wurundjeri Woi-Wurrung பூர்வீக குடி மக்களின் பாரம்பரிய நிலங்களில் அமைந்துள்ளது.
பல நூற்றாண்டுகளாக நடக்கும் பூர்வீக குடி மக்களின் போராட்டத்தின் தொடக்கத்துடன் ஜனவரி 26ஆம் தேதி நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்று Merri-Bek நகர சபை மேயர் Angelica Panopoulos கூறுகிறார்.
“கப்டன் Arthur Philip, 1788ஆம் ஆண்டில் கப்பலில் முதலில் இந்நாட்டிற்கு வந்த நாள் முதல் பூர்வீக குடி மக்கள் அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுவதும் இனப்படுகொலையும் தொடங்கியது,” என்று அவர் கூறினார்.
“உண்மை என்னவென்றால், தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் அதிர்ச்சி (intergenerational trauma), தொடரும் இனப்பாகுபாடு மற்றும் குற்றவியல் மற்றும் நீதி துறைகளில் பூர்வீக குடி மக்கள் தொடர்ந்தும் பல பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள். அவை காலனித்துவத்தின் பின் விளைவுகளாகும்.”
“அதனால்தான் ஜனவரி 26 கொண்டாடுவதற்கான நாள் அல்ல என்று பூர்வீக குடி மக்கள் கூறும்போது, அதற்கு நாம் செவி சாய்ப்பது மிகவும் முக்கியம்.”

இந்தக் கருத்தை Craig Rigney எதிரொலித்தார்: “ஒரு சமூகமாகவும் ஒரு தேசமாகவும் கற்றுக் கொள்ளவும், கற்பிக்கவும், கேட்கவும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.”
“இந்த சமூகத்தின் ஒரு பகுதியாக, (மற்றும்) இந்த தேசத்தின் ஒரு பகுதியாக, நாங்கள் ஆஸ்திரேலியா என்று அழைக்கும் இந்த நாட்டையும், ஒருவரையொருவர் மரியாதையுடன் நேசிக்கவும், அங்கீகரிக்கவும் கற்றுக்கொள்வோம் என்று நான் நம்புகிறேன்.”
இருந்தாலும், எந்த நாளை ஆஸ்திரேலியர்கள் கொண்டாட வேண்டும் என்ற கேள்விக்கு, இன்றும் தவறான மற்றும் பிளவுபட்ட கருத்துகள் மக்களிடையே இருப்பதாக அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா தினத்தை ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலியா முழுவதும் கொண்டாட வேண்டும் என்று 1994ஆம் ஆண்டில்தான் முடிவெடுக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
