வெளிநாடுகளிலிருந்து தங்கள் உறவினர்களை ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்க விரும்புபவர்கள் மீது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தவல்ல நடைமுறை ஒன்றை கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஆஸ்திரேலிய அரசு அறிமுகம் செய்துள்ளதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்கப்படும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைப் பராமரிப்பதற்கான போதிய நிதி ஆதாரம் தம்மிடம் இருக்கிறது என்பதை இங்குள்ளவர்கள் குடிவரவு அமைச்சுக்கு காண்பிக்கவேண்டியது அவசியமாகும்.
இந்தநிலையில் குறித்த நிதி ஆதாரத் தொகையை கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பாரியளவில் அதிகரித்திருக்கிறது Malcolm Turnbull அரசு.
தங்களது பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு அழைக்க விரும்பும் கணவனும் மனைவியும் கூட்டாக 45 ஆயிரத்து 185 டொலர்களை ஆண்டு வருமானமாக பெறுபவர்களாக இருக்கவேண்டும் என்பது இதுவரைகாலமும் இருந்து வந்த நடைமுறை. இந்த கூட்டுவருமான தொகை இம்மாதம் முதல் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 475 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தனி நபர் ஒருவர் தனது பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பதானால், அவர் ஆண்டொன்றுக்கு 45 ஆயிரத்து 185 டொலர்கள் வருமானம் ஈட்டுபவராக இருக்கவேண்டும் என்ற பழைய சட்டம் திருத்தப்பட்டு, அவர் 86 ஆயிரத்து 606 டொலர்களை ஆண்டு வருமானமாக பெறுபவராக இருக்கவேண்டும் என்ற மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆஸ்திரேலியா வருகின்ற வெளிநாட்டவர்கள், நாடு திரும்பும்வரை ஆஸ்திரேலிய வங்கியில் காண்பிக்கக்கோரும் பிணை பணத்தின் பெறுமதியும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத் திருத்தமானது கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
Share
