மருத்துவ பாவனைக்காக கஞ்சாவை ஏற்றுமதி செய்ய ஆரம்பிக்கிறது ஆஸ்திரேலியா. அதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது மட்டுமல்லாது, உலக உற்பத்தியில் ஆஸ்திரேலியா முதல் இடம் பெறும் என தான் நம்புவதாக சுகாதார அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஏற்றுமதிக்கான ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளதால், அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய மருத்துவ கஞ்சா உற்பத்தி அதிவேகமாக வளரும் என்றும், உள்ளூர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்றும் சுகாதார அமைச்சர் Greg Hunt வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
மருத்துவ கஞ்சா உற்பத்தியில் ஆஸ்திரேலியா முதல் இடத்தைப் பெறமுடியும் என்று அமைச்சர் நம்புகிறார்.
கஞ்சா ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஏற்றுமதி செய்வதற்கு அரச அனுமதி பெறவேண்டும்.
ஆஸ்திரேலிய அரசு, 2016ம் ஆண்டில் மருத்துவ தேவைக்காக நோயாளிகள் கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கியிருந்தது - ஆனால், அந்தந்த மாநிலங்கள் அதனை அனுமதித்தால் மட்டுமே வைத்தியர்கள் அதனை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய முடியும்.
விக்டோரிய மாநிலம் தான், மருத்துவ பயன்பாட்டிற்கு கஞ்சாவின் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கிய முதல் மாநிலம். தொடர்ந்து NSW மாநிலமும் அதனை சட்டமாக்கியது.
இதுவரை, 350 நோயாளிகள் ஆஸ்திரேலியாவில் வளர்க்கப்பட்ட கஞ்சாவை மருத்துவ தேவைக்காகப் பயன்படுத்தி வருவதாக சுகாதாரத் துறை கூறுகிறது.
இருந்தாலும், சில மருத்துவர்கள் கஞ்சாவின் பாவனையை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கத் தயக்கம் காட்டுகின்றனர்.
மருத்துவ பாவனைக்காக கஞ்சாவை ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டதை, எதிர்க்கட்சியின் மூத்த உறுப்பினர் Anthony Albanese வரவேற்றார்.
Share
