சட்டவிரோத படகுப்பயணம் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கை உட்பட பல்வேறு குற்றச்செயல்களை முறியடிப்பதற்கு உதவியாக இலங்கைக்கு ஆஸ்திரேலிய அரசு ட்ரோன்களை வழங்கும் நிகழ்வு கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கை பொலீஸ்அதிகாரி சி.டி. விக்ரமரட்ணவிடம் ஆஸ்திரேலியாவின் Commander Joint Agency Task Force, Rear Admiral Mark Hill உத்தியோகபூர்வமாக இந்த ட்ரோன்களை கையளித்துள்ளார்.
இந்த ட்ரோன்கள் கையளிப்பு தொடர்பாக Mark Hill தெரிவிக்கும்போது - சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வருவோரை ஆஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு ஒரு சதவீதம்கூட இல்லை. அந்தவகையில், இலங்கையிலிருந்து புறப்படுகின்ற ஆட்கடத்தல்காரர்களின் படகுகளை இலங்கைப் பாதுகாப்பு படையினர் முறியடிக்கும் நடவடிக்கைகள் குறித்து, இலங்கைக்கு ஆஸ்திரேலியா மிகுந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. இலங்கை அரசின் இந்த முழுமையான நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவதற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி புரிவதற்கும் தயாராக உள்ளது. அதன் ஒரு அங்கமாக, ட்ரோன்களை வழங்குவதில் ஆஸ்திரேலியா பெருமையடைகிறது. இந்த ட்ரோன்கள் பல்வேறு குற்றச்செயல்களை கண்டறிவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மாத்திரமல்லாமல், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படுபவர்களை இனங்காணுதல் மற்றும் உதவிபுரிதல் ஆகிய தொழிற்பாடுகளிலும் பயன்படுத்தப்படும்- என்று தெரிவித்திருக்கிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
