ஆஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக அனைவரும் வீடுகளில் முடங்கியிருந்ததாலும், flu தடுப்பூசியை முன்கூட்டியே போட்டுக்கொண்டதாலும் இவ்வாண்டு flu-ஆல் ஏற்படக்கூடிய மரணங்கள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக இடைவெளி, பயணக் கட்டுப்பாடுகள், மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணப்படுதல் போன்ற செயற்பாடுகளால், இவ்வாண்டின் முதல் 5 மாத காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் குறைவானோருக்கே flu ஏற்பட்டதாக Immunisation Coalition தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி 2020 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 20,032 பேருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் 504 பேருக்கும் flu ஏற்பட்டுள்ளதாக Immunisation Coalition கூறியுள்ளது.
2019ம் ஆண்டு ஜனவரி- மே மாதம் வரை இந்த எண்ணிக்கை 74,176 ஆக பதிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை கொரோனா தாக்கத்துடன் சேர்த்து மிக மோசமான flu பரவலை தாம் எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால் ஏப்ரல் மே மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக ஆஸ்திரேலியாவில் flu-ஆல் ஏற்படக்கூடிய மரணங்கள் கணிசமானளவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் Australian Medical Association (AMA) SA தலைவர் Dr Chris Moy தெரிவித்தார்.
அதேநேரம் flu தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் இவ்வருடம் அதிகம் என்பதும் இதற்கான மற்றுமொரு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு flu-உடன் தொடர்புடைய 900 மரணங்கள் பதிவாகியிருந்த பின்னணியில் இவ்வருடம் மே மாத இறுதிவரை 36 மரணங்களே பதிவாகியுள்ளதாக Australian Influenza Surveillance அறிக்கை தெரிவிக்கின்றது.
எது எப்படியிருப்பினும் பலரும் முன்கூட்டியே flu தடுப்பூசியை போட்டிருப்பதால் தாமதப்படுத்தப்பட்ட flu பரவல் இவ்வாண்டின் பிற்பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதை மறுக்கமுடியாது என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று காரணமாக 102 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
