ஒரு புதிய வீசா எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து அறிமுகமாகிறது. தொழில்முனைவோரை (entrepreneurs) ஆஸ்திரேலியாவிற்கு வரவழைப்பதற்காக இந்த புதிய வீசா அறிமுகமாகிறது. அது குறித்த வாதப் பிரதிவாதங்களையும், அதில் அடங்கக்கூடியவற்றையும் அரசு தற்போது ஆராய்ந்து வருகிறது.
தொழில்முனைவோரில் மிகவும் புத்திசாலித்தனமானவர்களையும் சிறப்பானவரையும் ஆஸ்திரேலியாவிற்குக் குடிவரச் செய்வதே தமது நோக்கம் என்று தொழில்துறை மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான அமைச்சர் (The Minister for Industry, Innovation and Science) Christopher Pyne கூறினார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், இவ்வாறு கூறினார்:
"ஆஸ்திரேலியாவின் வளர்ச்சிக்கு, ஆஸ்திரேலியாவிலிருக்கும் தொழில்முனைவோரின் பங்களிப்பு மட்டும் போதாது, உலகளாவிய வகையில் அப்படியானவர்களை நாம் கவர்ந்திழுக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு மேற்கல்வியை மேற்கொள்ள வருபவர்கள் இப்படியான திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்களையும் ஆஸ்திரேலியாவிலேயே தங்க வைப்பதும் இதன் நோக்கம்."
இந்த புதிய வீசா எப்படி வழங்கப்படவேண்டும் என்ற முறையில் கருத்துகளைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும், இது குறித்து மக்களின் கருத்தைத் தாம் அறிய விரும்புவதாகவும் குடிவரவு அமைச்சர் Peter Dutton கூறினார்.
"விஞ்ஞான அறிவை ஆஸ்திரேலியாவில் வளர்க்கும் திட்டமான, National Innovation and Science Agenda என்ற திட்டத்தின் அடிப்படையில், தொழில்துறை சார்ந்தவர்களின் நிதி உதவியோடு புதிய தொழில்முனைவோர் வீசா (entrepreneur visa) வழங்கப்படவுள்ளது. இந்த புதிய வீசா சரியாக செய்லபடுத்தப்படுவதற்கு உங்களது கருத்துகளை வரவேற்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
இந்தப் புதிய வீசா:
தமது தொழில்முறைக்குத் தேவையான முதலீட்டை ஏற்கனவே பெற்றிருக்க வேண்டும்; தொழில்துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படும் Business Innovation and Investment (Provisional) visa (subclass 188) வீசா சார்ந்த ஒரு வீசாவாக இருக்கும்; இந்த வருடம் நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்; எத்தனை வழங்கப்படும் என்ற உச்ச வரம்பு (no cap on the number of visas being granted) கிடையாது.
இந்த நாட்டில், இரண்டு தசாப்தங்களாக சுரங்கத் தொழிலால் ஏற்பட்ட வளர்ச்சி மேலும் தொடராது. புதிய எண்ணங்கள் (ideas boom), புதிய நிறுவனங்கள், அதனை செயற்படுத்தக்கூடிய திறமைசாலிகள் தேவை என்கிறார், பிரதமர் Malcolm Turnbull.
இது குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும், பின்வரும் இணையத்தளத்திற்குச் செல்லவும்: http://www.border.gov.au/about/reports-publications/discussion-papers-submissions
ஆஸ்திரேலிய வீசா குறித்த தரவுகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள எங்கள் முகநூலுக்கு விருப்பம் தெரிவியுங்கள்: http://www.faceboom.com/sbstamil