COVIDSafe செயலி எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது?
அரசாங்கத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தரவிறக்கியுள்ளார்கள் என்றும், மேலும் 10 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்துவார்கள் என்று அரசு நம்புகிறது.
கோவிட்-19 தொற்று எப்படிப் பரவுகிறது என்பதைக் கண்டறிய இந்த மொபைல் செயலி உதவும் என்று அரசு கூறுகிறது.
இதன் செயற்பாடு கைபேசியிலுள்ள Bluetooth தொழில்நுட்பத்தில் தங்கியுள்ளது. ஒன்றரை மீட்டருக்கும் குறைந்த தூரத்தில் குறைந்தது 15 நிமிடங்களை ஒருவர் கோவிட்-19 தொற்றுள்ள ஒருவருக்கு அருகில் செலவிட்டால்-இப்படியான சூழ்நிலையில்தான் இந்த வைரஸ் தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதால்- இந்த செயலி அதனைப் பதிவு செய்து அந்தத் தரவை பகிர்ந்து கொள்ளும். அந்த செயலியைப் பயன்படுத்துபவர் சோதனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கும்.
COVIDSafe செயலியிலுள்ள தரவுகள் எவ்வாறு கையாளப்படும்?
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர் தனது தகவல்களை தொலைபேசியில் பதிவேற்றுவதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே மாநில மற்றும் பிரதேச சுகாதார அதிகாரிகள் அத்தகவலை அணுக முடியும்.
மேலும் தனிமைப்படுத்தப்படவேண்டிய அல்லது பரிசோதனை செய்யப்பட வேண்டியவர்களை எச்சரிக்க உதவுவதற்கு மட்டுமே சுகாதார அதிகாரிகள் இத்தரவினைப் பயன்படுத்த முடியும்.
COVIDSafe செயலி மாத்திரமே ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு contact trace செயலி ஆகும். மேலும் தகவலுக்கு COVIDSafe app Health Department என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
எப்படியான தனிப்பட்ட தகவல்கள் இந்த செயலி ஊடாக பகிரப்படும்?
இச்செயலியை தரவிறக்கும் ஒருவர் தமது பெயர், தொலைபேசி இலக்கம், postcode மற்றும் வயதெல்லை போன்றவற்றை பதிவேற்ற வேண்டும். பதிவுசெய்யும் செயற்பாட்டை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி உங்களுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் உங்களுக்கான பிரத்தியேக reference code உருவாக்கப்படும்.
இச்செயலி பயன்படுத்துபவர் இருக்கும் இடம் குறித்த விபரங்களை இச்செயலி சேகரிப்பதில்லை என குறிப்பிடப்படுகிறது.
COVIDSafe செயலி பயன்படுத்துபவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்?
கோவிட்-19 தொற்று ஏற்பட்டவரின் தரவுகள் பாதுகாப்பாக சேமிக்கப்படும். குறித்த நபர் அனுமதியளிக்கும்பட்சத்தில் மாத்திரம் மாநில மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் கீழ்க்காணும் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
- செயலியில் சேமிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை பெறுதல்
- அவர்களையோ அல்லது அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதைத் தெரியப்படுத்தல்.
- அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறியத்தரல். குறிப்பாக
- எங்கே எப்படி பரிசோதனைகளை மேற்கொள்ளல்.
- குடும்பத்தினரைத் இத்தொற்றிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்பதை அறியத்தரல்
- யாருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது என்ற பெயர் விபரத்தை மாநில மற்றும் சுகாதார அதிகாரிகள் அறியத்தரமாட்டார்கள்.
உங்கள் தரவுகள் இச்செயலியில் எப்படி சேமிக்கப்படுகிறது என்பது தொடர்பில் அறிந்துகொள்ள Privacy Policy–ஐ வாசியுங்கள்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirusஎன்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
