விக்டோரியாவை தவிர ஏனைய மாநிலத்தவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு பிறகு நியூசிலாந்துக்கு பயணிப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern இதற்கான பச்சைக்கொடியை காண்பித்துள்ளார்.
கொரோனா தொற்றில்லாத இடங்களை சேர்ந்தவர்களை தங்களது நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே அரசு மட்டத்தில் கலந்துரையாடிவருகின்ற நியூஸிலாந்து பிரதமர், ஆஸ்திரேலியர்களுக்கான பயண அனுமதி குறித்து ஏற்கனவே சாதகமான பதிலை வழங்கியிருந்தார்.
தற்போது விக்டோரியாவில் பரவிவருகின்ற தொற்றினை அடுத்து, விக்டோரியவாசிகளை தவிர ஏனைய மாநிலத்தவர்களை பகுதி பகுதியாக நாட்டுக்குள் பயணிக்க அனுமதிப்பதற்கு தயாராக இருப்பதாக Jacinda Ardern கூறியுள்ளார்.
அந்தந்த மாநிலங்கள் கொண்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இந்தப்பயண அனுமதியை வழங்குவதற்கு தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தப்பயணம் எதிர்வரும் செப்டெம்பருக்கு பிறகு சாத்தியமாகும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்ததாக நியூசிலாந்து நாட்டவர்களே ஆஸ்திரேலியாவுக்கு அதிக எண்ணிக்கையில் உல்லாசப்பயணிகளாக வருபவர்கள் என்பதும் வருடத்துக்கு சுமார் 14 லட்சம் நியூசிலாந்து நாட்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு பயணிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
