பிரிட்டன் மன்னர் மூன்றாவது சாள்ஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ளநிலையில், இதையொட்டி பொதுவிடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி ஆஸ்திரேலியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மகாராணி இரண்டாவது எலிசபெத் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மகன் சாள்ஸ் மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள போதிலும், அவருக்கான முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே 6ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1953ம் ஆண்டு இரண்டாவது எலிசபெத் அவர்கள் மகாராணியாக முடிசூடிக்கொண்டபோது ஆஸ்திரேலியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
அதேபோன்று மன்னர் சாள்ஸ் முடிசூட்டுவிழாவின்போதும் சிறப்பு விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு அறிவிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரியுள்ளனர்.
இதுகுறித்து எவ்வித அறிவிப்பையும் ஆஸ்திரேலிய அரசு இதுவரை வெளியிடவில்லை.
எலிசபெத் மகாராணியை நினைவுகூரும்வகையில் அவரது மரணத்தையொட்டி பொதுவிடுமுறை வழங்கப்பட்டது போல, மன்னரின் முடிசூட்டு விழாவை ஆஸ்திரேலிய மக்கள் கொண்டாடும் வகையில் சிறப்பு விடுமுறை வழங்கப்படவேண்டுமென்ற குரல்கள் வலுத்துவருகின்றன.
இருப்பினும் மே 6ம் திகதி சனிக்கிழமை என்பதால், ஆஸ்திரேலியர்கள் வேலைக்கு விடுமுறை எடுக்காமலேயே முடிசூட்டுவிழாவைப் பார்த்துமகிழ முடியும் என்பதால், சிறப்பு விடுமுறை அறிவிக்கப்படுவதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி நியூசிலாந்து நாட்டவர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படாது என அந்நாட்டு பிரதமர் Jacinda Ardern அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
