ஆஸ்திரேலியாவில் இஸ்லாம் மதத்தை துறந்து Faithless Hijabi என்ற அமைப்பினை உருவாக்கி செயற்பட்டுவந்த தன்சானிய பின்னணி கொண்ட பெண், தாயகத்துக்கு சென்றிருந்த சமயம் அந்நாட்டு பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு 32 மணித்தியாலங்கள் எந்தக்குற்றச்சாட்டுமின்றி தடுத்துவைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரை பாதுகாப்பாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதற்கான எற்பாடுகளை மேற்கொள்ளும்படி பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னாள் முஸ்லிம்களுக்கான உலகளாவிய அமைப்பு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற Zara Kay என்ற 28 வயது தன்சானிய பெண் ஆஸ்திரேலியாவில் ஒரு செயற்பாட்டாளராக இயங்கிவந்துள்ளார். இஸ்லாத்தை துறந்தமைக்காக வன்முறையை அல்லது பாரபட்சத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கான அமைப்பையும் உருவாக்கி செயற்பட்டு வந்துள்ளார்.
தனது செயற்பாடுகளை பிரதிபலிக்கும் வகையிலான இவரது சமூக வலைத்தளப் பதிவுகள் பல்வேறு மட்டங்களிலும் வரவேற்பையும் சர்ச்சையையும் எதிர்ப்பையும்கூட ஏற்படுத்தியிருந்தன என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் தனது சொந்த நாடான தன்சானியாவுக்கு சென்றிருந்தபோது, 'நிந்தனை" செய்தார் என்று அநாமதேயமாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தன்சானிய பொலீஸார் இவரை விசாரணைக்கு அழைத்து 32 மணிநேரமாக தடுத்துவைத்திருந்தனர். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கோவிட் காலத்தில் தன்சானிய அரசின் செயற்பாடுகள் போதாது என்ற தனது சமூக வலைத்தள பதிவு உட்பட, ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொண்டபோது தன்சானிய கடவுச்சீட்டினை தன்சானிய அரசிடம் ஒப்படைக்கவில்லை, தன்சானிய கைத்தொலைபேசி எண்ணை தனது உறவினரின் பெயரில் பெற்றுக்கொண்டது போன்றவை கைதுக்கான காரணங்களாக கூறப்பட்டதாகவும் இவை அனைத்தும் அரசியல் உள்நோக்கங்களுடன் தன் மீது புனையப்பட்ட குற்றங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் தனது இருப்பு அந்த நாட்டில் இன்னமும் கேள்விக்குறியாக உள்ளதாகவும் தனது விடுதலைக்காக தொடர்ந்து போராடும்படியும் அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Zara Kay விவகாரத்தில் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுவருவதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
