ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த 54 ஆயிரத்தி 419 பேருடைய விண்ணப்பங்கள் மாத்திரமே 2017-18 நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இதேகாலப்பகுதியில் சுமார் 1 லட்சத்தி 39 ஆயிரத்தி 285 பேருக்கு குடியுரிமை பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளநிலையில் இவ்வாண்டு மிக காலதாமதமாக குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த ஏப்ரல் 30 வரை ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தமது கைவசம் இருப்பதாக தெரிவித்துள்ள குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சு, இவையனைத்தும் பரிசீலனைக்குட்படுத்தப்படவுள்ளதாக கூறியுள்ளது.
இந்தநிலையில் குடியுரிமைக்காக விண்ணப்பித்த ஒருவர் அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி 16 மாதங்களாக தற்போது அதிகரித்துள்ளது.
குடியுரிமை கோரி அதிகளவானோர் விண்ணப்பிப்பதாலும் கடுமையான பாதுகாப்பு விதிகளின் கீழ் இவை பரிசீலிக்கப்படுவதாலும் ஒருவர் குடியுரிமை பெறுவதற்கு காத்திருக்கும் காலம் அதிகரித்துள்ளதாக குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சு நியாயப்படுத்தியுள்ளது.
Share
