கட்டாரில் கடந்த ஆறு மாதங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை பேராசிரியரும் அவருடைய மகனும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
58 வயதான பேராசிரியர் லுக்மன் தலீப் மற்றும் 24 வயதான அவரது மகன் இஸ்மயில் தலீப் ஆகியோர் கட்டாரில், அடையாளம் தெரியாத இடமொன்றில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவுசெய்யப்படாத நிலையில் கடந்த 6 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
சீருடை தரிக்காத உத்தியோகத்தர்கள் சிலராலேயே இவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக பேராசிரியரின் மகள் மரியம் SBS செய்திப்பிரிவிடம் கடந்தமாதம் தெரிவித்திருந்தார்.
பேராசிரியர் லுக்மனின் மற்றுமொரு மகன் தொடர்பிலேயே குறித்த இருவரும் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுவதாக இவர்களின் விடுதலை தொடர்பில் செயற்பட்டுவந்த தொண்டு அமைப்பான CAGE தெரிவித்துள்ளது.
விக்டோரியாவைச் சேர்ந்த அஹமட் தலீப் என்ற மற்றுமொரு மகன் அல்கைதா அமைப்பிற்கு நிதியுதவி செய்ததாக அமெரிக்க கருவூலத்துறையால் குற்றச்சாட்டுக்குள்ளாகியவர் என குறிப்பிடப்படும் அதேநேரம் கடந்த அக்டோபரில் இவரது Doncaster இல்லத்தில் ஆஸ்திரேலிய பொலிஸாரால் தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தப்பின்னணியில் பணிநிமித்தம் ஆஸ்திரேலியாவிலிருந்து கட்டாரில் குடியேறிய பேராசிரியர் லுக்மனும் மகன் இஸ்மாயிலும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்ட பின் தற்போது விடுதலைசெய்யப்பட்டு மகள் மரியம் வசிக்கும் நாடான துருக்கியை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த இருவரின் தடுப்புக்காவல் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசின் பங்கு எந்தளவுக்கு இருந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டுமென CAGE அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
