ஆஸ்திரேலியாவில் உற்பத்திசெய்யப்படும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளதால் வியட்நாமிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதொடர்பாக பரிசீலிக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலியாவின் பிரதான அரிசி விநியோக நிறுவனமாகிய SunRice தெரிவித்துள்ளது.
போதியளவு மழையின்மை மற்றும் வரட்சியால் ஆஸ்திரேலிய அரிசி உற்பத்தி கடந்த இரண்டு வருடங்களாக பெரும் சரிவை கண்டுள்ளது.
அதுமட்டும்மல்லாமல் கொரோனா முடக்கநிலை அச்சத்தால் அதிகளவானோர் தேவைக்கு அதிகமான அரிசியை வாங்கி சேமித்துள்ளமை நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வழக்கமாக 800,000 தொன் அரிசி உற்பத்தியை மேற்கொள்ளும் நியூ சவுத்வேல்ஸ் தென் பிராந்திய வயல்கள், கடந்த இரண்டு வருடங்களாக 54,000 தொன் அரிசியை மாத்திரமே அறுவடை செய்திருக்கின்றன.
இந்த உற்பத்திச்சரிவு தொடரும் பட்சத்தில், இந்த வருட கிறிஸ்மஸிற்கு முன்னர் உள்ளூர் அரிசியின் கையிருப்பும் தீர்ந்துவிடும் அபாயமுள்ளதாக அரிசி விநியோகஸ்தர்கள் அரசுக்கு எச்சரித்துள்ளார்கள்.
எனினும் நாட்டு மக்களுக்குத் தேவையான அரிசி விநியோகம் தொடர்ந்து பேணப்படுவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் தமது பங்கில் மேற்கொள்ளப்படுவதாக SunRice தெரிவித்துள்ளது.
அதேநேரம் வியட்நாம் அரசுடன் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் தொடர்புகொண்டு அரிசி இறக்குமதி வாய்ப்புநிலை குறித்து பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
