பிலிப்பீன்ஸிற்கு அருகிலுள்ள தீவில் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து சென்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட இரண்டு இளைஞர்களும் இவர்களது நண்பரும் அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் திரும்பிவரமுடியாத நிலையில் தீவிலேயே முடங்கிப்போயுள்ளார்கள்.
ஒன்பது நாட்களுக்கு சுற்றுலா சென்ற தாங்கள் மூவரும் அந்த தீவை விட்டு பிலீப்பீன்ஸின் தலைநகர் மணிலாவுக்குக்கூட வரமுடியாத நிலையில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
பிலிப்பீன்ஸிற்கு அருகிலுள்ள Boracay என்ற தீவிலேயே De Silva, அவரது மைத்துனர் Hasindu Saranguhewage, அவரது நண்பர் Elias Harrak ஆகிய மெல்பேர்னை சேர்ந்த மூவரும் இவ்வாறு சிக்கியுள்ளார்கள்.
பிலிப்பீன்ஸில் தோன்றியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டின் எல்லைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதிவரை மூடுவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
ஐந்நூறுக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் திரும்ப வழியில்லாமல் சிக்கியுள்ள Boracay தீவிலும் கொரோனா பரவலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் 13 ஆம் திகதி தீவுக்கு போய் சேர்ந்த இளைஞர்கள் மூவரும் ஆஸ்திரேலியாவுக்கு எப்படித் திரும்புவது என்ற வழிகள் எதுவுமில்லாமல் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அவையும் கைகூடாமல் சிக்கியுள்ளதாக அங்கிருந்து தகவல் தெரிவித்துள்ளார்கள்.
Share
