கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு சென்று திரும்பும்போது ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படாமல் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்பட அனுமதிக்கப்படக்கூடும் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக வர்த்தகம், மருத்துவ காரணங்கள், முக்கியமான குடும்ப நிகழ்வுகள் மற்றும் இறுதிச்சடங்குகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படும் ஆஸ்திரேலியர்கள்(கொரோனா தடுப்பூசி போட்டவர்கள்) நாடு திரும்பும்போது ஹோட்டல்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுவதிலிருந்து விதிவிலக்கு வழங்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் எனவும் ஆனால் அதை தத்தம் வீடுகளிலேயே மேற்கொள்ளும் வகையில் விதிவிலக்கு வழங்கப்படக்கூடும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதற்கான அனுமதி எப்போதிலிருந்து வழங்கப்படும் என்பது குறித்தும் இத்திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுவருவதாக அவர் கூறினார்.
அதேநேரம் வெளிநாட்டு விமானப்பயணத்தை பரந்தளவில் அனுமதித்து அதற்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தினால் வாரத்திற்கு 1000 கொரோனா தொற்றாளர்களை ஆஸ்திரேலியா எதிர்கொள்ள நேரிடும் எனவும் பிரதமர் ஸ்கொட் மொறிசன் எச்சரித்தார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.