இதன்படி, superannuation guarantee எனப்படுகின்ற, உங்களது வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை, ஒரு சூப்பர் கணக்கு அல்லது நிதியத்திற்கு உங்கள் முதலாளி செலுத்துகிறார்.
எனவே சூப்பர் நிதியங்களை trusts என குறிப்பிடலாம். உறுப்பினர்களின் சார்பாக பணத்தை சேகரித்து பாதுகாப்பதுடன் அதை அவர்கள் முதலீடு செய்கிறார்கள், மேலும் அவர்களின் குறிக்கோள் ஓய்வு காலத்தில் நன்மைகளை வழங்குவதாகும்.
எனவே trustee-இன் குறிக்கோள், உங்கள் பணம் சரியாக முதலீடு செய்யப்படுவதை உறுதிசெய்து, ஓய்வுபெறும் காலத்திற்கென அதை சேமித்துவைப்பதாகும்.
நம்மில் பெரும்பாலானோர் பெரிய சூப்பர் அனுவேசன் நிதியங்களின் உறுப்பினர்களாக இருப்போம், இப்பெரிய நிதியங்கள் அனைத்தும் Australian Prudential Regulation Authority என அழைக்கப்படும் அரச கட்டுப்பாட்டு மையத்தில் பதிவு செய்யப்பட்டு, மேற்பார்வையிடப்படுகின்றன.

உங்கள் நிதியம், உங்கள் பணத்தை எவ்வாறு முதலீடு செய்கிறது என்பதில் நீங்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். மேலும் உங்கள் சூப்பர் சேமிப்பை, நிதியங்களுக்கு இடையில் மாற்றிக்கொள்ளலாம்.
ஒவ்வொரு சூப்பர் நிதியமும், நிதி சேமிப்பு தொடர்பிலான தெரிவை உங்களிடம் வழங்கும்.
இத்தெரிவுகளில் ஒன்று "நீங்கள் நெறிமுறை முதலீடுகளில் மட்டும் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா?" என்பதாகும்.
மேலும் "நீங்கள் கூடிய அதிகரிப்பை விரும்புகிறீர்களா?" என்ற அதிக ஆபத்துள்ள தெரிவும், "குறைந்த அதிகரிப்பை விரும்புகிறீர்களா?" என்ற மிகவும் நிலையான தெரிவும் உள்ளது.
இதில் உங்கள் பணத்தை இழக்க மாட்டீர்கள், ஆனால் நீங்கள் அதிகம் சம்பாதிக்கவும் மாட்டீர்கள்.
சூப்பர் அனுவேசனுடன் தொடர்புடையதாக காணப்படும் வரிச் சலுகைகள், இதை கவர்ச்சிகரமான முதலீட்டுத் தெரிவாக மாற்றுகின்றது.
ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை, எவரும் தங்கள் சூப்பர் நிதியத்தில் பணத்தைப்போட முடியும். அதாவது, அதிக நிதிப்பங்களிப்புகளை அவர்களே செய்யமுடியும்.

இவற்றுக்கும் குறைந்த வரி விதிக்கப்படுகிறது. எனவே சூப்பருக்கு வரி விதிக்கப்படும் அதேநேரம், உங்கள் சம்பளத்திற்கான வரி விகிதம் என்னவாக இருந்தாலும், நிதிப்பங்களிப்புகளுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.
மேலும் இதனூடான வருமானத்திற்கு 15 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.ஓய்வு காலத்தில், வருமானத்திற்கான வரி பூஜ்ஜிய சதவீதத்தில் விதிக்கப்படுகிறது.
எனவே உங்களுக்குத் தேவைப்படாதவரை, பணத்தை சேமித்து வைப்பதில் ஒரு பெரிய நன்மை இருக்கிறது.
சூப்பர் அனுவேசன் என்பது உங்களது ஓய்வுகாலத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ளதால், எப்போது பிறந்தீர்கள் என்பதைப் பொறுத்து, "preservation age" அதாவது 55 முதல் 60 வயதை அடையும் போது மட்டுமே உங்களின் சூப்பர் நிதிப்பங்களிப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.

நீங்கள் 65 வயதை எட்டியவுடன் உங்கள் சூப்பர் நிதியை திரும்பப் பெறலாம் என்று விதிகள் கூறுகின்றன.
1965ம் ஆண்டு தொடக்கம் பிறந்தவர்கள், 60 வயதை எட்டியவுடன், வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலோ, அல்லது வேலையை விட்டுவிட்டாலோ சூப்பர் அனுவேசனைப் பெறலாம்.
மேலும் 1965 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள் எனில் அந்த வயதுக்கு முன்னதாகவே, குறிப்பாக 55 வயதிலேயே அதை திரும்பப்பெறலாம்.
மிகக் குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில் மாத்திரம், உங்களது சூப்பர் நிதியை முன்கூட்டியே பெறலாம்.
உதாரணமாக, கடுமையான நிதிநெருக்கடி, கருணை அடிப்படையிலான காரணங்கள், அல்லது குணப்படுத்தமுடியாத நோய்நிலைமை ஏற்படுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
நீங்கள் ஓய்வு பெற்றவுடன், உங்களது சூப்பர் நிதி அனைத்தையும் ஒரே நேரத்தில் திரும்பப் பெறலாம், அல்லது முதலீடு செய்யலாம்.
Account-based pension-க்கு பணத்தை மாற்றுவதே ஆஸ்திரேலியாவில் ஒரு பொதுவான தெரிவாக காணப்படுகிறது. இது மக்கள் தங்களுடைய சூப்பர் அனுவேசன் நிதியில் சேமிக்கும்போது பயன்படுத்தும் முதலீட்டுக் கணக்குகளைப் போலவே இயங்குகின்ற ஒரு முதலீட்டுக் கணக்காகும்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 அல்லது 5 சதவீதத்தில் ஆரம்பிக்கும் minimum withdrawal rate நிபந்தனையை பூர்த்திசெய்யும் வரை, அந்த முதலீட்டுக் கணக்கிலிருந்து நீங்கள் பணத்தை எடுக்கலாம்.
இதைச் செய்வதன் நன்மை என்னவென்றால், account-based pension இல் சேர்க்கப்படும் பணத்துடன் தொடர்புடைய கணிசமான வரிச் சலுகைகள் உள்ளமையாகும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.