அவசரகாலச்சூழ்நிலைகளில் மாநில அரசுகள் பொலீஸ் படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தினரின் உதவியைப்பெற்றுக்கொள்ளும் சட்டத்திருத்தம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரம், மாநில அரசானது ஏதாவது ஒரு சூழ்நிலையை தன்னால் கட்டுப்படுத்தமுடியாது என்றும் தங்களிடமுள்ள படைவளத்துடன் அந்த சூழ்நிலைக்கு தீர்வு காணமுடியாது என்றும் அவசர கால பிரகடனம் ஒன்றை அறிவித்தால் மாத்திரமே இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் பிரகாரம், மாநில பொலீஸ் படையினருக்கு உதவியாக மேலதிகமாக இராணுவத்தின் உதவி தேவை என்று மாநில அரசு கருதுமானால் பாதுகாப்பு அமைச்சு அதனை சாதகமாக பரிசீலிப்பதற்கு ஏதுவாக மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்படக்கூடிய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின்போது ஏற்படக்கூடிய தேவையை கருத்திற்கொண்டு இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக Greens கட்சி கருத்து தெரிவிக்கும்போது, 'எதேச்சாதிகாரத்தை நோக்கி ஆஸ்திரேலியா செல்வதை எடுத்துக்காட்டும் சட்டம்தான் இது' என்று கண்டித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள அரசுத்தரப்பு, 'மாநில அரசு முன்வைக்கும் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சு எப்போதும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற எந்தக்கட்டாயமும் இல்லை. இராணுவ உதவிக்கான கோரிக்கையை நிலமையின் காத்திரம் கருதி பாதுகாப்பு அமைச்சு நிராகரிக்கவும் முடியும்' என்று கூறியுள்ளது.
