பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த, 23 வயதான சிஃபாத் என அழைக்கப்படும் Md Isfaqur Rahman, புதன்கிழமை அதிகாலை வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தநிலையில், ராயல் டார்வின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திய Northern Territory காவல்துறையினர், இப்போது இந்த சம்பவத்தை ஒரு கொலை என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரையோ அல்லது அவர் ஏன் தாக்குதல் நடத்தினார் என்பது தொடர்பிலோ அவ்வீட்டில் இருந்த எவருக்கும் தெரியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Charles Darwin பல்கலைக்கழகத்தில் Information Sciencesஇல் முதுகலைப் படிப்பைத் தொடங்குவதற்காக Isfaqur Rahman கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஆஸ்திரேலியா வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது மரணம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள Charles Darwin பல்கலைக்கழகத்தின் பங்களாதேஷ் மாணவர் சங்கம், இந்த துயரமான இழப்பால் தமது ஒட்டுமொத்த சமூகமும் வேதனையடைந்துள்ளதாகவும், அவரது ஆன்மா அல்லாஹ்வின் முன்னிலையில் நித்திய சாந்தி அடையட்டும் என்றும் கூறியுள்ளது.
Isfaqur Rahman மீதான தாக்குதலைக் கண்டித்து வியாழன் அன்று, Charles Darwin பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொதுப் போக்குவரத்திலும் வீடுகளிலும் மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதேநேரம் Northern Territory முதலமைச்சர் என்ற முறையில், Isfaqur Rahmanஐ அறிந்த மற்றும் நேசிக்கும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக Natasha Fyles கூறியுள்ளார்.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect on1800 737 732, More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
