SKIP TO MAIN CONTENT

Opal, Myki, Go அட்டைகளுக்கு மாற்றாக வங்கி அட்டை அறிமுகம்?

சிட்னியில் பயன்படும் Opal அட்டைகள், மெல்பேர்ணில் பயன்படும் Myki அட்டைகள் மற்றும் ப்ரிஸ்பேன் நகரில் பயன்படும் Go அட்டைகள் இந்த வருட இறுதிக்குள் பாவனையிழந்து போகலாம்.

Opal, Myki, and Go Cards
bye bye Opal, Myki, and Go Cards Source: SBS Tamil

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் இந்த மூன்று அட்டைகளும் செயலுக்கு வர, வரி செலுத்துவோருக்கு மொத்தமாக $ 2.8 பில்லியன் செலவாகியுள்ளது.  அவற்றிற்குப் பதிலாக, வங்கிகள் வழங்கும் நாணய அட்டைகள் (credit and debit cards) 2019ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்படலாம்.  அதற்கான சோதனைகள் ஆரம்பமாகியுள்ளன.  வங்கி அட்டைகள் மட்டுமல்ல, smartphoneகளும் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட வழி செய்கின்றன இந்த மூன்று மாநிலங்களும்.

Opal அட்டைகள் சிட்னியில் அறிமுகமானபோது மக்களிடமிருந்து பாரிய வரவேற்பு கிடைக்கவில்லை.  பல இயந்திரங்கள் செயலிழந்திருந்தமை அவசர வேகத்தில் செல்லும் பயணிகளை விரக்தி கொள்ள வைத்தன.  அது மட்டுமல்லாது, எவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது என்பதிலும் குழப்பங்கள் நிலவின.  ஒட்டுமொத்தமாக, பயணிகள் அவற்றை வேண்டாவெறுப்போடு தான் உபயோகிக்க ஆரம்பித்தார்கள்.  இந்த Opal அட்டைகளின் செயற்பாடுகளைச் சீராக்க, NSW மாநில அரசு மேலதிகமாக 1.2 பில்லியன் டொலர்களை செலவு செய்ய வேண்டியிருந்தது.

சிட்னி நகரின் வட பகுதியிலுள்ள மான்லி என்ற இடத்திற்கும் சிட்னி நகருக்குமிடையிலான படகுப் போக்குவரத்தில் வங்கி அட்டை மற்றும் smartphone மூலம் பயணக் காசை செலுத்தும் பரீட்சார்த்த முயற்சி தற்போது நடைபெறுகிறது.  சுமார் 15,000 க்கும் அதிகமான பயணிகள் இப்போது தங்கள் வங்கி அட்டைகளை 'tap' செய்து பயணக் கட்டணத்தைச் செலுத்த முடியும்.

வரவிருக்கும் மாதங்களில், பேரூந்துகள், டிராம்கள் மற்றும் ரயில்களில் வங்கி அட்டை கொண்டு பயணக் கட்டணத்தைச் செலுத்த முடியும்.

Opal அட்டைகளை வாங்குவதற்குக் குறைந்தது $20 செலவு செய்ய வேண்டும்.  சிட்னி நகருக்கு சுற்றுலா செல்பவர்கள், வெளியூரிலிருந்து வருபவர்கள் இதனை விரும்புவதில்லை.  வங்கி அட்டை மூலம் பயணக் கட்டணத்தைச் செலுத்தும் போது, மேலதிக பணம் ஏதும் செலவாகாது, இன்னொரு அட்டையைக் காவித்திரிய வேண்டிய அவசியமும் இல்லை.

தற்போது 14 மில்லியன் பேர், ஒவ்வொரு கிழமையும் Opal அட்டைகளைப் பயன்படுத்துகிறார்கள்.  புதிதாக வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வகை செய்யப்பட்ட பின்னரும், Opal அட்டைகளின் பாவனையை நிறுத்தப் போவதில்லை என்று NSW போக்குவரத்து அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதே வேளை, விக்டோரிய அரசு E-class டிராம்களில், Myki அட்டைக்குப் பதிலாக வங்கி அட்டையைப் பயன்படுத்துவது குறித்து பரீட்சிக்கப் போவதாக தற்போது அறிவித்துள்ளது.  Myki அட்டை செயல்படுத்த 1.5 பில்லியன் டொலர்களை செலவழித்தது என்பது நோக்கத்தக்கது.  NSW மாநிலத்தின் Opal அட்டைகள் போலவே, Myki அட்டையும் அறிமுகமானபோது சர்ச்சைகள் இருக்கத்தான் செய்தது.  அறிவித்ததற்கும் மேலதிகமாக விக்டோரிய அரசு, 500 மில்லியன் டொலர்களை செலவழித்திருந்தது மட்டுமல்ல, மூன்று ஆண்டுகள் தாமதமாகவே பயன்பாட்டிற்கு அந்தது.

ப்ரிஸ்பேன் நகரில் Go அட்டைகள் 10 வருடங்களுக்கு முன்னர் அறிமுகமாகியது.  87 சதவீதத்திற்கும் மேலான பயணிகள் Go அட்டையைப் பயன்படுத்துகிறார்கள் - ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 3 மில்லியன் பயணங்கள் செய்வதற்கு Go அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.  2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2019 ஆம் ஆண்டின் முற்பகுதியிலோ வங்கி அட்டைகள் மூலம் பயணக் கட்டணம் செலுத்த வகை செய்யப்படும் என்று குயின்ஸ்லாந்து மாநில அரசு அறிவித்துள்ளது.

வங்கி அட்டையைப் பயன்படுத்தி பயணக் கட்டணம் செலுத்தும் போது அதற்காக கூடுதல் கட்டணம் அறவிடப்பட மாட்டாது என இந்த மூன்று மானிலங்களும் அறிவித்துள்ளன.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now