ஆஸ்திரேலிய அகதியாக ஆறு வருடங்கள் மனுஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த Behrouz Boochani நியூசிலாந்தில் அகதி அங்கீகாரம் பெற்றுள்ளார்.
அந்நாட்டில் அவர் சுதந்திரமாக தங்குவதற்கான அனுமதியினை வழங்குவதாக அந்நாட்டு குடிவரவு திணைக்களம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆறு வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்த குர்திஷ் பின்னணிகொண்ட ஊடகவியலாளும் எழுத்தாளுருமான Behrouz Boochani ,அப்போதைய குடிவரவு நடைமுறைகளின் பிரகாரம் மனுஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலிய அகதிகளுடன் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
அங்குள்ள அதிகளின் பேச்சாளராக செயற்பட்டு தடுத்துவைக்கப்பட்ட Behrouz Boochani நீண்ட கால அகதிகளின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் பரப்புரை செய்துவந்தார்.
Behrouz Boochani மனுஸ் தீவிலிருந்த காலப்பகுதியில் எழுதிய தனது அனுபவத்தை வட்ஸ் அப் ஊடாக அமெரிக்காவிலுள்ள தனது நண்பருக்கு அனுப்பி, அவர் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்து No Friend But the Mountains, என்ற நூலாக வெளியிட்டபோது, அதற்கு விக்டோரிய அரசின் உயர் இலக்கிய விருது கிடைத்தது.
ஆனாலும் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுக்கு அந்நாட்டு அமைப்பொன்று அழைத்ததின்பேரில் Behrouz Boochani விருந்தினர் விசாவில் அங்கு சென்றிருந்தார்.
அங்கு தனது அகதிக்கோரிக்கையை விண்ணப்பித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நியூசிலாந்து அவருக்கு தனது நாட்டில் தங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
