SKIP TO MAIN CONTENT

Behrouz Boochani நியூசிலாந்திலிருந்து ஒருபோதும் ஆஸ்திரேலியா வர முடியாது - டட்டன்

Boochani, Dutton
Source: Boochani, Dutton

1 min read

Published

Updated


Skip to article content

நியூசிலாந்து சென்றுள்ள மனுஸ் தீவு அகதியும் ஊடகவியலாளருமான Behrouz Boochani, ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் காலடி பதிக்க முடியாதென உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

மனுஸ் தீவில் கடந்த ஆறு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த குர்திஷ் ஊடகவியலாளர் Behrouz Boochani, நவம்பர் 29 ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெறவுள்ள இலக்கிய விழாவில் கலந்துகொள்வதற்காக விருந்தினர் விசாவில் அங்கு சென்றுள்ளநிலையில், மீண்டும் மனுஸ் தீவுக்கு திரும்பும் எண்ணமில்லை என்று கூறியிருந்தார்.

Behrouz Boochani நியூசிலாந்தில் தஞ்சம்கோருவார் என எதிர்பார்க்கப்படும் பின்னணியில் இவ்விடயம் முற்றுமுழுதாக நியூசிலாந்து அரசுடன் சம்பந்தப்பட்டது என அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்தார்.

அதேநேரம் Behrouz Boochani-க்கு நியூசிலாந்து அரசு அகதி தஞ்சம் வழங்கினாலும்கூட, அவர் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் கால்பதிக்க முடியாது என அமைச்சர் டட்டன் உறுதியாக கூறியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்த Behrouz Boochani அப்போதைய அரசின் குடிவரவுக்கொள்கையின்படி  மனுஸ் தீவுக்கு அனுப்பப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்கு தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் Behrouz Boochani எழுதிய "No Friend But The Mountains" என்ற நூல் விக்டோரிய மாநில அரசின்  அதிகூடிய பணப்பரிசினை வென்றது.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கான விருந்தினர் விசாவுடன் கடந்த வாரம் நியூசிலாந்து சென்ற Behrouz Boochani, மனுஸ் தீவுக்கு ஒருபோதும் இனிமேல் திரும்பிப்போகமாட்டேன் என்றும், அகதி என்ற முகவரியோடு அலையாமல் விடுதலைக்காற்றை எனது இதயத்தினால் சுவாசிக்க ஆசைப்படுகிறேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now