ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான பரீட்சையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக குடிவரவு, குடியுரிமை, புலம்பெயர்ந்தோர் சேவைகள் மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர்(acting) Alan Tudge தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய விழுமியங்கள் தொடர்பான கேள்விகளுடன் ஆஸ்திரேலிய வாழ்வியல் தொடர்பான புதிய கேள்விகளும் இணைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் ஆஸ்திரேலியாவின் விழுமியங்கள் மற்றும் பெருமைகள் குறித்த 20 கேள்விகள் குடியுரிமைக்கான பரீட்சையில் கேட்கப்பட்டன.
எதிர்வரும் நவம்பர் 15 முதல், இந்த 20 கேள்விகளில் ஆஸ்திரேலியாவின் வாழ்வியல் தொடர்பான 5 புதிய கேள்விகளும் உள்ளடக்கப்படவுள்ளதாகவும், இந்த 5 கேள்விகளுக்கும் சரியாக பதிலளிப்பதுடன் ஒட்டுமொத்த மதிப்பெண் 75க்கு மேல் எடுக்கும் ஒருவரே குடியுரிமை பரீட்சையில் சித்தியடைந்ததாக கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உதாரணமாக- சம பாலின திருமணம், ஆஸ்திரேலிய குடிமக்கள் அனைவரும் ஏன் வாக்களிக்க வேண்டும், குடும்ப வன்முறை தொடர்பான கேள்விகள், நாட்டின் சட்ட ஒழுங்குமுறைகளை எந்த மத விழுமியங்களும் மீறமுடியாது- போன்றவற்றை வலியுறுத்தும் விடயங்களும் புதிய கேள்விக்கொத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய குடியுரிமைப் பரீட்சை Multiple-choice questions-சரியான விடையை தெரிவுசெய்யும் பரீட்சைமுறையாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
