ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறிப்பாக தருணிகாவின் விண்ணப்பத்திற்கு procedural fairness காண்பிக்கப்படவில்லை என நீதிபதி Mark Moshinsky தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் குறித்த குடும்பம் உடனடியாக நாடுகடத்தப்பட முடியாது என்பதுடன் தருணிகாவின் விண்ணப்பம் குறித்த சட்ட விவகாரங்கள் தொடரவிருக்கின்றன.
பிரியா குடும்பத்தின் சட்டத்தரணியிடம் தொலைபேசி வழியாக ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி Mark Moshinsky இன்று தனது தீர்ப்பினை வழங்கினார்.
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா மற்றும் நடேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் சுமார் ஒன்றரை வருடங்களாக மெல்பேர்னிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில், சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் தீர்ப்புவழங்குவதற்கு கால அவகாசம் எடுத்து தீர்ப்பினை வழங்கியது.
இதன்படி பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்திருந்த பின்னணியில் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலேயே தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப்பின்னணியில் குறித்த விவகாரத்தை ஆராய்ந்த நீதிபதி Mark Moshinsky தருணிகாவுக்கு procedural fairness காண்பிக்கப்படவில்லை என தீர்ப்பளித்துள்ளார்.
இத்தீர்ப்பினை தமக்கு சாதகமான ஒன்றாகவே பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள அகதிகள் செயற்பாட்டாளர்கள் இத்தீர்ப்பானது இனிவரும்நாட்களில் பிரியா-நடேஸ் குடும்பத்தின் நாடுகடத்தலை கடினமாக்கியுள்ளதாக கூறியுள்ளனர்.
