ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த வாரம் சிட்னியில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் Blue Mountains பிரதேசத்தை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான தளமாக உபயோகப்படுத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆஸ்திரேலிய பொலீஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள்.
சிறுவயதிலிருந்தே "நாங்கள் பயங்கரவாதிகள்" என்று கூறி, தானே இஸ்லாமிய தேசத்திற்கான போராட்டக்குழுவின் ஆஸ்திரேலிய தளபதி என சம்பந்தப்பட்ட சகாக்களிடம் தெரிவித்துவந்தார் என்று கூறப்படும் Isaak el Matari என்ற இந்நபர், வெளிநாட்டிலிருந்து ஆயுதங்களை பெற்றுவந்து ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் என்று பொலீஸார் கூறியுள்ளார்கள்.
கடந்த டிசெம்பர் மாதம் IS அமைப்பில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார் என்று கூறப்படும் குறிப்பிட்ட நபர், சிட்னி பென்ரித் பகுதியிலுள்ள விமான பயணச்சீட்டு வாங்கும் அலுவலகம் ஒன்றில் பயணச்சீட்டை வாங்கியுள்ளார் என்றும் சீனாவின் ஊடாக இஸ்லாமாபாத் செல்லவிருந்தார் என்றும் அங்கிருந்து ஆப்கானிஸ்தான் செல்லவிருந்ததும் தங்களது விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது என்றும் பொலீஸார் கூறியுள்ளனர்.
அங்கு ஆயுத பயிற்சிகளை எடுத்துவிட்டு ஆயுதங்களையும் கொள்முதல் செய்துகொண்டு சிட்னிக்கு வந்து Blue Mountains பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான தளத்தை அமைக்க திட்டமிட்டிருந்தார் என்று பொலீஸாரால் கூறப்பட்டுள்ள இந்த நபர், சிட்னியின் பொலிஸ் நிலையங்கள், நகர் மையத்திலுள்ள தேவாலயங்கள், பாதுகாப்பு தளங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கும் திட்டமிட்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
Isaak el Matari உட்பட குறிப்பிட்ட சந்தேக நபர்கள் ஓகஸ்ட் 30 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்கள்.
