நியூ சவுத்வேல்ஸ் Blue Mountains பகுதியில் Whirlpool மிதவைப்படகிலிருந்து நீரோடைக்குள் விழுந்து மாணவி ஒருவரும் அவரைக்காப்பாற்றச் சென்ற பொலீஸ் உத்தியோகத்தரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நீருக்கு அடியில் இழுத்துச்செல்லப்பட்டு நேற்றுமாலை முதல் காணாமல்போயிருந்த இருவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சுற்றுலாப்பிரியர்கள் பெருந்தொகையில் குழுமுகின்ற Blue Mountains பிரதேசத்தில் canyoning எனப்படுகின்ற நீரில் வழுக்கிச்செல்கின்ற விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீரில் விழுந்தவர் சீனாவைச் சேர்ந்த மாணவி (வயது 24) என்று தெரிவிக்கப்படுகிறது. Whirlpool-இல் காற்றடைத்த மிதவைகளில் நீரில் வழுக்கி விளையாடிக்கொண்டிருந்தவர்களில் குறிப்பிட்ட சீன மாணவி திடீரென்று மிதவையிலிருந்து நீருக்குள் விழுந்து, இழுத்துச்செல்லப்பட்டுவிட்டார்.
அவரைக்காப்பாற்றுவதற்கு அவர்களுடன் கூடப்பயணம் செய்திருந்த (கடமையில் இல்லாத) பொலீஸ் உத்தியோகத்தர் நீருக்குள் பாய்ந்திருக்கிறார். சமீப காலமாக Blue Mountains பகுதியில் பெய்த அடைமழையினால் அப்பகுதியில் பெருகியிருந்த வெள்ளமும் பாறைகளில் காணப்பட்ட வழுக்கும் தன்மையும் இருவரையும் நீருக்கு அடியில் இழுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவசர சேவைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக விரைந்த அம்புலன்ஸ் பிரிவினரும் மீட்புப்பிரிவினரும் காணாமல்போனவர்களுடன் அங்கு சென்றிருந்த ஆறுபேரை மீட்டுள்ளார்கள். காணாமல்போன இருவரையும் முழுமுயற்சியுடன் தேடியிருக்கிறார்கள்.
காலநிலை காரணமாக நேற்றுமாலை ஆறுமணிக்கு தேடுதல் நிறுத்தப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை தேடியபோது, இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடமையில் இல்லாதபோதும் உதவிக்காகச் சென்று தனது உயிரை மாய்த்த பொலீஸ் பெண்மணிக்கு பல தரப்புக்களிலிருந்து அனுதாபங்கள் குவிந்தவண்ணமுள்ளன. குறிப்பிட்ட பொலீஸ் உத்தியோகத்தர் Kelly Foster (வயது 39) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு 2016 இல் குணமானவர் என்று கூறப்படுகிறது.
