செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் குறித்த பெண் Pacific Explorer கப்பலில் இருந்து கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், இவரது சடலம் அம்மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் 23 வயதுப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
Pacific Explorer உல்லாசப் பயணக் கப்பல் செவ்வாய்க்கிழமை மெல்பனில் இருந்து புறப்பட்டு கங்காரு தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்தப் பெண் மற்றொரு குடும்ப உறுப்பினருடன் பயணித்திருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
ஒரு விமானமும் இரண்டு மீட்பு ஹெலிகாப்டர்களும் தெற்கு ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் உள்ள Cape Jaffa கடற்கரையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இரவு முழுவதும் தேடுதலை நடத்தியதாக ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணும் நடவடிக்கைகளுக்காக Mount Gambier மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுடன் பயணித்த குடும்ப உறுப்பினருக்கு தொடர்ந்து கவனிப்பையும் உதவியையும் வழங்குவதாகவும், அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் Carnival Australia கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கப்பலில் உள்ள பயணிகள் மற்றும் குழுவினர் "ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றும் Carnival Australia தெரிவித்துள்ளது.
கப்பல் இப்போது Port மெல்பனுக்குத் திரும்பி வருவதாகவும், இந்த மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணை நடத்துவர் என்றும் SA பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share
