SKIP TO MAIN CONTENT

அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தும் விடயத்தில் ஆஸ்திரேலியா பச்சைக்கொடி!

Australian Prime Minister Malcolm Turnbull and New Zealand Prime Minister Jacinda Ardern
Australian Prime Minister Malcolm Turnbull and New Zealand Prime Minister Jacinda Ardern Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு 150 மனுஸ் மற்றும் நவுறு அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என்ற நியூசிலாந்து அரசின் சலுகையை ஏற்றுக்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் செயலாளர் Michael Pezzullo கோடிட்டுக்காட்டியுள்ளார்.

வருடமொன்றுக்கு ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து அரசு அறிவித்திருந்த நிலையில், இச்சலுகை இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், ஆஸ்திரேலியா இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern, பல தடவை குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இச்சலுகையை தொடர்ந்தும் மறுத்துவந்த ஆஸ்திரேலிய அரசு, படகு மூலம் வந்தவர்களை நியூசிலாந்தில் குடியமர்த்தினால் ஆட்கடத்தல்காரர்கள் தமது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அது வழிகோலும் எனத் தெரிவித்தது.

ஆனால் நியூசிலாந்து நாட்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விசா கட்டுப்பாடின்றி வந்துபோக முடியும் என்ற நிலையை மாற்றி, அகதிகளாக அங்கு குடியமர்த்தப்பட்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாதபடி சட்டமாற்றத்தை கொண்டு வந்து, மனுஸ் மற்றும் நவுறு அகதிகளை அங்கு குடியமரச் செய்யலாம் என லேபர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் செனற் விசாரணைக் குழுவிடம் கருத்து வெளியிட்ட உள்துறை அமைச்சின் செயலாளர் Michael Pezzullo, ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் ஒரு முடிவு எட்டப்பட்ட பின், நியூசிலாந்தின் சலுகையை ஏற்றுக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை நியூசிலாந்தில் குடியமர்த்தப்படும் மனுஸ் மற்றும் நவுறு அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் பயணம் மேற்கொள்ளாதவாறு தடை செய்வதா இல்லையா என்ற முடிவு முற்றுமுழுதாக ஆஸ்திரேலியாவைப் பொறுத்தது என நியூசிலாந்து நாட்டின் குடிவரவு அமைச்சர் Iain Lees-Galloway தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now