வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Boxing Day கிரிக்கெட் ஆட்டத்துக்கு இந்த ஆண்டு மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம் (MCG) சரியாக ஈடு கொடுக்கவில்லையென்றால், அடுத்த வருடம் முதல் இந்த வாய்ப்பு பெர்த் நகருக்கு செல்லக்கூடும் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிறுவனத்துக்கும் (Cricket Australia) மெல்பேர்ன் கிரிக்கெட் மைதான நிறுவனத்துக்கும் (MCG) இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1980 ஆம் ஆண்டு முதல் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் Boxing Day டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றுவந்தது.
கடந்த வருடத்துடன் இந்த ஒப்பந்தம் காலாவதியாகியிருக்கிறது. மீண்டும் நீண்டகால அடிப்படையிலான ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதில் நிலவும் இழுபறி மற்றும் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் குறித்து கிளம்பியிருக்கின்ற முறைப்பாடு ஆகியவற்றையடுத்து இந்த ஆண்டு நடைபெறும் போட்டி இடைக்கால ஏற்பாடாகவே ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.
ஆகவே, டிசெம்பெர் மாதம் நடைபெறவுள்ள Boxing Day ஆட்டத்தில் MCG கள நேர்த்தி குறித்து நுணுக்கமாக கவனம் செலுத்தப்படவுள்ளது.
மைதானத்தில் குறைபாடுகள் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டால் Boxing Day டெஸ்ட் ஆட்டத்தை மெல்பேர்ன் இழக்கவேண்டிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருந்தொகையான ரசிகர்கள் படையெடுக்கும் ஆட்டத்தை - தங்களது மாநிலத்தில் நடத்துவதற்கு ஏனைய மாநிலங்கள் போட்டியிட ஆரம்பித்துள்ளன.
பெர்த் நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள Optus அரங்கில் இந்தப்போட்டியை நடத்துவதற்கு மேற்கு ஆஸ்திரேலிய அரசு முயற்சிசெய்துவருவதாக கூறப்படுகிறது.
பெர்த்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த Optus அரங்கு பல்வேறு வகைகளில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தைவிட நவீன மயமானது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், 2057 ஆம் ஆண்டுவரைக்கும் ஆஸ்திரேலிய உதைபந்தாட்ட இறுதிப்போட்டியை (AFL- Grand Final) மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்குரிய ஒப்பந்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் விக்டோரியா, Boxing Day ஆட்டத்தை நடத்தும் உரிமையை இழக்குமா என்பது எதிர்வரும் டிசெம்பர் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
