SKIP TO MAIN CONTENT

குடிகாரர்களை அடித்து நொறுக்கலாம் - காவல்துறை தலையிடாது

குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்க பெண்களுக்குத் துடுப்பாட்டத் தடி பரிசு

Bats for Brides
An Indian politician has ordered thousands of bats and gifted them to new brides in an attempt to draw attention to alcoholism and domestic violence. Source: Gopal Bhargava

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

மதுபானத்திற்கு அடிமையாகித் தமது மனைவி மாரை வதைக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதிலிருந்து காப்பாற்ற, புது மணப் பெண்களுக்கு பொல்லுத்தடியைப் பரிசாக வழங்கியுள்ளார், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில அரசியல்வாதி, கோபால் பார்கவா.

புதிதாக திருமணமான பெண்களை அவர்களின் கணவர்கள் மது அருந்திவிட்டு வார்த்தைகளால் திட்டுவதையும், அடிப்பதையும் தடுக்கும் நோக்கில், அந்த துடுப்பை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த அவர்கள் ஊக்கிவிக்கப்பட்டுள்ளார்கள்.

மத்திய மத்தியப் பிரதேச அரசின் ஏற்பாட்டில், 700 திருமணங்கள் ஒரே நாளில் நடத்தப்பட்டது.  துணிகளைத் துவைக்கப் பயன்படுத்தப்படும் துடுப்புகளை அரசியல்வாதி கோபால் பார்கவா மணப்பெண்களுக்குப் பரிசளித்தார். 

சுமார் ஒரு அடி நீளமுள்ள இந்த கனத்த துடுப்புகளில் "குடிகாரர்களை அடித்து நொறுக்க" என்ற வாசகமும், "காவல்துறை இதில் தலையிடாது" என்ற வாசகமும் அச்சிடப்பட்டுள்ளன.

இந்தத் துடுப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர், எதற்காக அதனைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை தங்களின் கணவரிடம் அவர்கள் விளக்க வேண்டும் என்று கோபால் பார்கவா அறிவுரை சொன்னார்.

ஆனால் மனைவியின் பேச்சை, கணவன் கேட்கத் தவறினால், மனைவிமாரின் தர்ம அடிக்கு ஆளாக வேண்டும் என்று கோபால் பார்கவா குறிப்பிட்டார்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் துடுப்புகளுடன் காட்சியளிக்கும் மணப்பெண்களின் புகைப்படத்தை கோபால் பார்கவா வெளியிட்டுள்ளார்.

இந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவிருப்பதால், பெண்களின் ஆதரவைப் பெற எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இது இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்னும் பத்தாயிரம் புதிய துடுப்புகளை விநியோகிக்கவும் கோபால் பார்கவா உத்தரவிட்டுள்ளார்.

பல மாநிலங்கள் மதுபானங்களின் விற்பனையைக் கட்டுப்படுத்தும் உத்தரவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  தமிழ்நாடு மாநில அரசு, தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்துவோம் என்று கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்தது.  ஹோட்டல்களில் மதுபான விற்பனைக்கு கேரள மாநில அரசு தடை விதித்துள்ளது.  பீஹார் மாநிலமும் அப்படியானதொரு நடவடிக்கையை எடுத்துள்ளது, மேற்கு வங்காளத்தில் பல வருடங்களாக, மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை தொடர்பாக உதவி தேவைப்படுபவர்கள் 13 11 14 அல்லது Mens Line Australia வை 1300 78 99 78 என்ற இலக்கங்களில் அழைக்கலாம்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now