வரி செலுத்துவோர்

பெரும்பாலான வரி செலுத்துவோர் அதிக வரி செலுத்த வேண்டி வரும்.
மருத்துவ வரி (medicare levy) 2 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக அதிகரிக்கிறது. இந்த மாற்றம் 2019ம் ஆண்டு ஜூலை 1ம் நாளிலிருந்து அறிமுகமாகும்.
இந்த வரி அதிகரிப்பு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய காப்பீட்டு திட்டத்திற்கு (NDIS) $ 22 பில்லியன் நிதி உதவி வழங்கப்படும்.
பாடசாலை மாணவர்கள்

பெரும்பாலான பள்ளிகளுக்கு மாணவருக்கு அதிக நிதியுதவி கிடைக்கும். கூடுதல் நிதித்தொகை 18.6 பில்லியன் டாலர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் பாடசாலைகள் பெற இருக்கின்றன.
பள்ளிக்கூட நிதிகள் தர நிர்ணயம் செய்யப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது.
வங்கிகள்

பெரிய வங்கிகள் இந்த வரவு செலவுத்திட்டத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். 0.06 சதவீத புதிய வரி அறிமுகமாகிறது. ஐந்து பெரிய வங்கிகளை (Commonwealth Bank, Westpac, National Australia Bank, ANZ மற்றும் Macquarie Bank) மட்டுமே இது பாதிக்கும். ஜுலை 1ம் நாள் அறிமுகமாகும் இந்த வரி, முன்னோக்கிய மதிப்பீட்டில், $ 6.2பில்லியன் வருமானத்தை அரசுக்கு வழங்கும்.
வங்கிகள் இந்த செலவை, வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிடும் என, பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.
கடன் அட்டைகள் வழங்குவதிலும் புதிய விதிகள் அறிமுகமாகின்றன. அதில், நுகர்வோர் புகார்களை விசாரிக்க ஒரு புதிய அதிகார சபை அமைய இருக்கிறது.
முதியவர்கள்

முதியவர்கள் ஒரு சில சிறிய வெற்றிகளைப் பெறுகிறார்கள்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில், சொத்துகளின் அடிப்படையில் ஓய்வூதியம் பெறும் சலுகையை நீங்கள் இழந்திருந்தால் அந்த சலுகை உங்களுக்கு மீள வழங்கப்படுகிறது.
மின் கட்டண உயர்வை சமாளிக்க $75 வழங்கப்படுகிறது (ஒரு முறை மட்டும்)
65 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் வசிக்கும் வீட்டை விற்று வேறு இடம் செல்லும்போது, $ 300,000 superannuation எனப்படும் ஓய்வூதியத்திட்டத்தில் சேர்க்கலாம்.
பல்கலைக்கழக மாணவர்கள்

பல்கலைக்கழக கட்டணம் உயர்கிறது. நான்கு வருட பாடநெறிக்கான கட்டணம் 2,000 முதல் 3,600 டாலர்களால் உயர்கிறது. அதாவது, அடுத்த ஆண்டு 1.8 சதவீதத்தாலும், 2022ம் ஆண்டில் 7.5 சதவீதத்தாலும் கட்டணம் அதிகரிக்கும்.
உங்கள் HECS கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்க வேண்டிய வருமான அளவு குறைக்கப்படும். தற்போது, நீங்கள் $ 55,000 மேல் சம்பாதிக்கும்போது மட்டுமே உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு ஜூலை முதல், நீங்கள் 42,000 டொலர் வருமானம் பெற ஆரம்பித்தவுடன் HECS திருப்பிச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.
டிப்ளோமாக்கள் போன்ற துணை-இளங்கலைப் பட்டங்கள் அறிமுகமாகின்றன. அது ஒருவகையில் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
சிட்னி

சிட்னி நகரின் மேற்கிலுள்ள பட்ஜெரீஸ் க்ரீக் என்ற இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க அடுத்த நான்கு ஆண்டுகளில் 5.3 பில்லியன் டாலர் வழங்கப்படும்.
இந்த விமான நிலைய திட்டம் தற்போது, சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்தத் திட்டத்தை, சில உள்ளூர்வாசிகள் எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.
வெளிநாட்டவர்கள்

இந்த வரவு செலவுத்திட்டத்தில், வீசா, வேலைவாய்ப்பு, சொத்து, மற்றும் கல்வி போன்றவற்றில் வெளிநாட்டவர்கள் இழக்கின்றனர்.
புதிய தற்காலிக திறன்கள் பற்றாக்குறையின் கீழ் வழங்கப்படும் வீசாவில் வரும் ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியர்களுக்கும், அவரை வேலைக்கமர்த்துபவர் 5,000 டொலர் வரை வரி செலுத்த வேண்டும். ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்காக, வெளிநாட்டவரைப் பணிக்கமர்த்துபவரிடமிருந்து புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதிலிட்ட வீடுகள் காலியாக இருந்தால், அதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
வெளிநாட்டு உரிமையாளர்கள் வசிக்கும் வீட்டை விற்கும்போது, capital gains tax எனப்படும் மூலதன இலாப வரி செலுத்த வேண்டும். புதிய கட்டுமானங்களில் வெளிநாட்டவர்கள் 50 சதவிகிதத்திற்கு மேல் உரிமை கொள்ள முடியாது.
ஆஸ்திரேலிய நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் பெரும்பாலான நியூசிலாந்து குடிமக்கள், இனிமேல் ஆஸ்திரேலிய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.
வெளிநாட்டவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரே வெற்றி என்றால், பெற்றோர் 10 ஆண்டுகள் வரை தங்க அனுமதிக்கும் புதிய வீசா மட்டுமே.
பாதுகாப்பு

பாதுகாப்பிற்காக 2017-18ல் அரசு 34.6 பில்லியன் டொலர்களை செலவிடுகிறது.
2020-21 ஆண்டளாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்பிற்காக அரசு செலவிடும்.
"படகுகளை நிறுத்த" தேவையான நிதியை Operation Sovereign Borders தொடர்ந்து பெறும்.
விவசாயிகள்

பல தசாப்தங்களுக்குப் பிறகு, விவசாயிகள் தங்கள் சரக்குகளை விரைவாகவும் மலிவாகவும் நகர்த்துவதற்காக உள்நாட்டிலுள்ள இரயில் வலைப்பின்னலைப் பயன்படுத்தப் போகிறார்கள்.
பிரிஸ்பேன் நகரையும் மெல்பேர்ண் நகரையும் இணைக்கும் வகையில் பாதை அமைக்க 8 பில்லியன் டொலர் ஒதுக்கப்படுகிறது. கட்டுமானம் இந்த ஆண்டு ஆரம்பமாகும்.
Landcare திட்டத்திற்காக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 1 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்துள்ளது அரசு.
இவை விவசாயிகளுக்கு நன்மை பயப்பன என்றாலும், தொலை தொடர்பை விருத்தி செய்ய எந்தத் திட்டமும் இல்லை.
தடுப்பூசி பெறாதவர்கள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி கொடுக்காத பெற்றோர் மானியத்தொகையில் சுமார் 28 டொலர் வரை இழப்பார்கள்.
Family Tax Benefit Part Aயில் முடக்கி வைக்கப்படும் இந்தப் பணத்தின் மொத்த தொகை சுமார் $ 66 மில்லியன் என அரசு மதிப்பிட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியா

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலம், புதிய சாலைகள் மற்றும் இரயில் பாதைகளை அமைப்பதற்கு கூடுதல் நிதி பெறுகிறது.
புகைபிடிப்போர்

சிகரட் புகைப்பவர்கள் செலுத்தும் வரி அளவில் புகையிலை கொண்டு புகைப்பவர்களும் சுருட்டு புகைப்பவர்களும் வரி செலுத்த வேண்டி வருகிறது.
இந்த மாற்றத்தால், அடுத்த நான்கு ஆண்டுகளில் 360 பில்லியன் டாலர்களை அரசு வசூலிக்கும்.
ஒலிபரப்பு நிலையங்கள்

இலவசமாக இயங்கும் வானொலி தொலைக்காட்சி நிலையங்களின் வருடாந்த உரிமக் கட்டணம் நீக்கப்பட்டு, குறைந்த வருட சந்தா அறிமுகப்படுத்தப்படும். Facebook, Netflix and Google போன்ற புதிய ஊடகங்கங்களுக்குப் போட்டியாக செயற்பட இந்த மாற்றம் உதவும் என்றும், இதனால் வருடத்திற்கு 90 மில்லியன் டொல்களை அவர்கள் சேமிப்பார்கள் என்றும் அரசு சொல்கிறது.
மேலும் பெண்கள் விளையாட்டின் திரையிடலுக்கு கூடுதலான நிதி கிடைக்கும்.
நேரடி விளையாட்டு ஒளிபரப்புகளின் போது சூதாட்டம் குறித்த விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்படும்.
சமூக நல மானியம் பெறுவோர்

நல்வாழ்வுக் கொடுப்பனவுகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அடுத்த வருடத்திலிருந்து, சில பெறுநர்கள் போதைப் பொருள் பாவனைக்கான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
வேலையில்லாதோருக்கு வழங்கப்படும் மானியம் பெறுவோர் யாராவது போதைப் பொருட்களோ, மதுவுக்கு அடிமையாகியிருந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படலாம்.
மானியம் பெறும் 49 வயதிற்குக் குறைந்த வேலையில்லாத ஒருவர், இரு வார காலப்பகுதியில், 50 மணிநேரங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்ட வேலை செய்திருக்க வேண்டும். நடமாடும் சொத்து (liquid assets) வைத்துள்ளவர்கள், மானியம் பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
Cashless பற்று அட்டை இரண்டு புதிய இடங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
இது நலன்புரி பெறுவோர் வாழ்க்கையை மிகவும் கடினமாக்கும் என்றும், இதனால் மிகச் சிலரே மானியம் பெறுவதை நிறுத்துவார்கள் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய காப்பீட்டு திட்டம் (NDIS)

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய காப்பீட்டு திட்டத்திற்கு முழுமையாக நிதியளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ வரி அதிகரிப்பிலிருந்து பெறப்படும் கூடுதல் பணத்திலிருந்து அதிக பணம் இதற்கு முதலிடப்படும்.
முன்னோக்கிய மதிப்பீட்டில், 9.1 பில்லியன் டொலர்கள் இதற்கான சிறப்பு கணக்கில் வைக்கப்படும்.
சிறுதொழில்

சிறு தொழில்களின் உரிமையாளர்கள் மற்றொரு வருடத்திற்கு உடனடி வரி விலக்குகளை அனுபவிப்பார்கள். பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என்று அரசு சொல்கிறது.
வருடத்தில், 10 மில்லியனுக்கும் குறைவாக ஈட்டும் ஒரு வணிக நிறுவனம், 20,000 டொலர் வரையான செலவை கணக்கில் தீர்க்கலாம். 2018 ஜூலை 1ல் இருந்து, அந்தத் தொகை ஆயிரம் டொலராகக் குறையும்.
வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவரைப் பணிக்கமர்த்தும் சிறு தொழில் நிறுவனம், புதிய கட்டணம் செலுத்த வேண்டும்.
மருந்து வாங்குவோர்

சில மருந்துகளின் விலையைக் குறைக்க அரசு மருந்துகள் தயாரிப்போருடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது சில மருந்துகளை வாங்க நீங்கள் செலவிடும் தொகை குறைவாக இருக்கும்.
இதய நோய், மற்றும் சில மனநோய் மருந்துகள் Pharmaceutical Benefits Scheme திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
Superannuation ஓய்வூதியம் பெறுவோர்

ஐந்து பெரும் வங்கிகளும் புதிய வரிகளை எதிர்கொள்ளவுள்ளன. இதனால், வங்கிகளில் பெரும் பங்குதாரர்களாக இருப்பவர்களான Superannuation ஓய்வூதியம் பெறுவோர் பாதிக்கப்படுவர்.
வங்கிகளின் இலாபங்கள் குறையும் போது, அவற்றின் பங்கு விலையில் வீழ்ச்சி ஏற்படும், மற்றும் அதனால் பங்குதாரர்களின் பங்குகளைப் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
முதல்தடவையாக வீடு வாங்குவோர்

வரவு செலவுத் திட்டத்தில், முதல் வீட்டிற்கு வாங்குவோர் மிகப் பெரும் வெற்றியாளர்கள்.
ஒரு வீடு வாங்குவதற்காக, superannuation எனும் ஓய்வூதியத் திட்டத்தில் மேலதிக பணத்தை சேமிக்க முடியும். ஆனால் நீங்கள் சேமிக்கக்கூடிய தொகை வருடத்திற்கு 15,000 டொலர் மற்றும் மொத்தமாக 30,000 டொலர் என மட்டுப்படுத்தப்படும்.
தம்பதியினர் என்றால், இருவரும் தனித்தனியாக சேமிக்க முடியும்.
வெளி நாட்டு உதவி

ஆஸ்திரேலியா வழங்கும் வெளிநாட்டு உதவித் தொகையின் அளவு 2018ம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கப்படும். நுகர்வோர் விலை குறியீட்டுடன் ஒப்பிடப்பட்டு சிறு அதிகரிப்பு செய்யப்படலாம்.
இந்த முடக்கத்தின் மூலம் 303 மில்லியன் டாலர் வெளிநாட்டு உதவித் தொகையில் குறைவாக செலவழிக்கப்படும்.
நோயாளிகள்

நோயாளிகள் மருந்திற்காகச் செலவிடும் தொகை குறைகிறது. மருத்துவ தள்ளுபடிகள் மீதான முடக்கத்தை அரசு நீக்குகிறது. Bulk bill செய்ய மருத்துவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.
இரத்தப் பரிசோதனை, பெண்களுக்கான சோதனைகள் சில, மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் சில சோதனைகளுக்கு அரசு நிதி வழங்கும்.
இவை அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்.
கருவூலக்காப்பாளர் Scot Morrison இன்று மாலை 7:30 மணிக்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த, ஆஸ்திரேலிய வரவு செலவுத் திட்டத்தில், தமிழ் மக்களுக்கு முக்கியமான விடயங்களை எமது Facebook மற்றும் இணையத்தள வழியாக, SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பு, உடனுக்குடன் எடுத்துவருகிறது. இந்தக் கட்டுரையில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட விடயங்கள் விரிவாகத் தனித்தனிக் கட்டுரைகளாகப் பிரசுரமாகும்.
இவை தவிர, மே 10, புதன் நிகழ்ச்சியில் வரவு செலவுத் திட்டம் குறித்த ஆய்வுகளும் மேலதிக தரவுகளும் ஒலிபரப்பாகும்.
