ஆஸ்திரேலிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளார் Josh Frydenberg சற்று நேரத்திற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
COVID-19 தடுப்பூசிகளைப் பெறுவதற்காக நாட்டிலும் வெளிநாட்டிலும் 1.7 பில்லியன் டொலர் செலவிலான ஒப்பந்தங்களை Oxford பல்கலைக்கழகம் மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசி கிடைத்தவுடன், அதனை விரைவில் தயாரித்து விநியோகிக்க மேலும் 10 மில்லியன் டொலர்கள் CSIROவிற்கு வழங்கப்படுகிறது (அவற்றில் ஒரு பகுதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது).
அரசு வழங்கும் மனநல சேவைகள் இரட்டிப்பாகும் என்றும் அந்த சேவைகள் அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர், இந்த சேவைகள் அனைத்தும் விக்டோரிய மாநிலத்தில் வாழ்பவர்களுக்கு மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் வாரங்களில் மனநல சேவைகளுக்கு மேலதிக நிதி குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கருவூலக்காப்பாளர் கூறினார்.
தேசிய மாற்றுத்திறனாளிகள் காப்பீட்டு (NDIS) திட்டத்திற்கு மேலதிகமாக 3.9 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் காவு கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் வாழ்ந்தவர்கள் என்றாலும் முதியோர் பராமரிப்புத் துறைக்கு மேலதிக நிதி ஒதுக்கப்படவில்லை.
முதியோர் பராமரிப்பு நிலையங்கள் குறித்த ராயல் கமிஷன் (Royal Commission) விசாரணை முடிவுகள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் போது புதிய நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
