ஆஸ்திரேலிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளார் Josh Frydenberg சற்று நேரத்திற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்தக் கொடுப்பனவு, டிசம்பர் மற்றும் அடுத்த வருடம் மார்ச் மாதம் என இரண்டு 250 டொலர் கொடுப்பனவுகளாக வழங்கப்படும்.
முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஆதரவு, பராமரிப்பாளர் கட்டணம் என்பன பெறுவோர், குடும்ப வரி சலுகைக்கு தேர்வானவர்கள், பராமரிப்புக் கொடுப்பனவு பெறுவோர் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு இந்தப் பணம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில், Centrelinkகிலிருந்து உதவித் தொகை பெற்று வந்த சுமார் 6.6 மில்லியன் பேருக்கு 750 டொலர் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பை சமாளிக்க இரண்டாவது தடவையாக 750 டொலர் 5 மில்லியன் பேருக்கு வழங்கப்பட்டது.
JobKeeper மற்றும் JobSeeker திட்டங்களின் கீழ் அரசு வழங்கும் மானியத் தொகை குறைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த செய்தி.
வேலையற்ற இளைஞர்களை வேலைக்கமர்த்தும் வணிக நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக அரசு ஏற்கனவே ஊக்குவிப்புத் தொகைகளை அறிவித்திருந்தது. தற்போது, பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சி பெற்று புதிதாக வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களது சம்பளத்தில் பாதித் தொகையை அரசு அந்த நிறுவனங்களுக்கு வழங்கும்.
புதிதாக JobMaker என்ற திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. 16 முதல் 30 வயதான எவரையும் வேலைக்கமர்த்தும் முதலாளிகளுக்கு, வாரத்திற்கு 200 டொலர்கள் மற்றும் 30 முதல் 35 வயதானவர்களை வேலைக்கமர்த்துபவர்களுக்கு வாரத்திற்கு 100 டொலர்கள் வழங்கப்படும்.
அப்படிப் பணிக்கமர்த்தப்படும் புதிய ஊழியர்கள், JobSeekerரில் இருந்திருக்க வேண்டும், வாரத்திற்கு குறைந்தது 20 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இந்த நிதி அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டாலும், பெரிய வங்கிகளுக்கு இந்த நிதி வழங்கப்பட மாட்டாது.
மேலதிகமாக 450,000 இளைஞர்கள் இதன் மூலம் புதிதாக வேலைகளில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் செலவிலான JobTrainer திட்டத்திற்கும் மேலதிகமாக, பாடசாலைகளை விட்டு வெளியேறுபவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக - 100,000 பேருக்கு பயிற்சி பெற்றவதற்கு ஊதிய மானியமாக - 1.2 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில், நாடு தழுவிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, இலவச குழந்தை பராமரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது அதற்கு அரசு 1.9 பில்லியன் டொலர்கள் செலவானதாக கூறப்படுகிறது.
ஆனால் ஜூலை மாதத்தில் JobKeeper திட்டத்திலிருந்து குழந்தை பராமரிப்பு வழங்குபவர்களை நீக்கிய பின்னர், "இடைக்கால ஆதரவு" வழங்குவதாக அரசு அறிவித்தது. அதற்காக 2020-21ல் மேலும் 708 மில்லியன் டொலர் செலவாகும் என்று அரசு அறிவித்தது.
