தற்போது அனைவரையும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள், முதியோர் பராமரிப்புப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் குழந்தைப் பராமரிப்பு செலவை குறைத்தல் ஆகியனவற்றுக்கு நிதி நிலை அறிக்கையில் பதில் இருக்கும் என்று நாட்டின் கருவூலக் காப்பாளர் Treasurer Jim Chalmers ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மேலும், சுமார் ஐம்பது லட்சம் குடும்பங்களும், சுமார் பத்து லட்சம் சிறு வணிக நிறுவனங்களும் பயனடையும் வகையில் 500 டாலர்வரை மின்சார கட்டண சலுகை தரப்படும் என்றும் அமைச்சர் Chalmers நேற்று அறிவித்தார்.
Single-parent payment கொடுப்பனவு தற்போது ஒரு குழந்தை 8 வயதானதும் நிறுத்தப்படுகிறது. ஆனால் அது இனி குழந்தை 14 வயது ஆகும்வரை தொடரும் என்று பிரதமர் Anthony Albanese இன்று அறிவித்துள்ளார். இந்த சலுகையினால் அரசுக்கு எதிர்வரும் இரு ஆண்டுகளில் மட்டுமே $1.9 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்படுகிறது.

இப்படியான சலுகைகளின் பின்னணியில் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வீடுகள் பற்றாக்குறை, வீட்டு வாடகை உயர்வு என்று கருவூலக் காப்பாளர் Treasurer Jim Chalmers கடினமான சவாலை எதிர்கொள்கிறார் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பணவீக்கம் போதுமான அளவு குறையவில்லை. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் 0.25 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. எனவே மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் கருவூலக் காப்பாளர் Treasurer Jim Chalmers என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதியோர் பராமரிப்பு துறைக்கான ஊதிய உயர்வு, சில ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு குழந்தை பராமரிப்பு செலவை குறைத்தல் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஆஸ்திரேலியர்களுக்கு வாழ்க்கைச் செலவு நிவாரணம் ஆகியவை நிச்சயம் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

வேலை தேடுபவர்களின் கொடுப்பனவுகளை உயர்த்தவும் அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் பண வீக்கம் அதிகரிக்கவும் கூடாது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் வேலை தேடுபவர்களின் கொடுப்பனவுகளை உயர்த்துவது பணவீக்கத்தை அதிகரிக்கவைக்கும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
முதியோர் பராமரிப்புக்கு அரசு அதிகம் செலவிட திட்டமிட்டுள்ளது. ஜூலை முதல், சுமார் இரண்டரை லட்சம் முதியோர் பராமரிப்புப் பணியாளர்கள் 15 சதவீத ஊதிய உயர்வைப் பெறுவார்கள். 11.3 பில்லியன் டாலர் அதிக செலவை முதியோர் பராமரிப்புத் துறை செலவிட திட்டமிடுகிறது. மட்டுமல்ல, சுமார் 12 லட்சம் குடும்பங்களுக்கு குழந்தை பராமரிப்பு செலவு குறையப்போகிறது. ஜூலை முதல் குழந்தைப் பராமரிப்பு செலவைக் குறைக்க அரசாங்கம் அடுத்த நான்கு ஆண்டுகளில் $55 பில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டுள்ளது.
பொருளாதாரத்தின் நம்பர் 1 பிரச்சனை பணவீக்கம். அதை கட்டுப்படுத்தாமல் சமபளத்தை உய்ர்த்துவதால் தொழிலாளர்கள் பயனடையமாட்டார்கள் என்று எதிர்கட்சியான லிபரல் கட்சி கூறுகிறது. பில்லியன் கணக்கில் அரசு செலவு செய்யும் அதே வேளையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்யப்போகிறது என்று எதிர்க்கட்சி நிதிதொடர்பான அறிவிப்பாளர் ஜேன் ஹியூம் அரசை எச்சரிக்கிறார்.
அனைத்து பொருளாதரா சவால்களுக்கும் நாளை சமர்பிக்கப்படவிருக்கும் நிதி நிலை அறிக்கையில் விடை கிடைக்கும் என்று நம்புவோம்.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
