இந்தக்காட்டுத்தீ நாம் சந்திக்கும் மிகமோசமான காட்டுத்தீ என்று சொல்லப்படுவது சரிதானா?
காட்டுத்தீ இந்த நாட்டுக்கு புதியதல்ல. அது இந்த மண்ணோடும் மனிதரோடும் புல், புதர், பூச்சி, புழு என்பவற்றோடும் சேர்ந்தே பயணித்து வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆஸ்திரேலிய சுற்றுச்சூழலைப் பொறுத்த அளவில், காட்டுத்தீ என்பது இயற்கையின், பிரிக்கமுடியாத கூறுகளில் ஒன்றாகும். காலங்காலமாக இந்த மண்ணில் அவ்வப்போது ஏற்பட்ட காட்டுத்தீயை பின்புலமாக க் கொண்டுதான் natural ecosystem என்ற தாவர, உயிரியல், நுண்ணுயிரியல் (microbes) தொகுதிகளின் பரிணாம வளர்ச்சியும் landscape என்ற நில அமைவு என்பனவும் நிர்ணயமாகியிருக்கின்றன. ஆஸ்திரேலிய native plants என்ற, இந்த நிலத்திற்கே சொந்தமான தாவரங்களுள் பல, எளிதில் தீ பற்றக்கூடியவையாகவும் அதே நேரத்தில், அவற்றுள் பல தாவரங்கள், regenerate என்ற மறு உருவாக்கத்திற்கு, தீயையே ஆதாரமாகக் கொண்டிருப்பதும் முரணான இயற்கை விநோதங்களாகும்.

நாட்டில் பரவலாகவும், குறிப்பாக தென்கிழக்குப் பிரதேசத்தில் செறிவாகவும் படர்ந்து இன்றும் நூற்றுக்கணக்கான இடங்களில் எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ காரணமாக பல மனித உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன; ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளன; பூச்சிகள், பல்லிகள், அரணைகள், பாம்பகள், தவளைகள், மரநாய்கள், கங்காரு, கோலா கரடிகள், பறவைகள் என்று சுமார், 1 பில்லியனுக்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் Kangaroo Island என்ற தீவில் மட்டும், 25000 கோலா கரடிகள் தீக்கிரையாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஏறக்குறைய 12.5 மில்லியன் hectare விஸ்தீரணமுள்ள காடுகள் எரிந்துள்ளன. இந்த காட்டுத்தீ காரணமாக, ஏறக்குறைய கடந்த பல வாரங்களாக, புகைமண்டலம், சிட்னி, மெல்பர்ன், கன்பரா, அடலைட் போன்ற பெருநகரங்களில், தொடர்சியாகவோ அல்லது விட்டு விட்டோ சூழ்ந்து, உலகிலேயே மிக மோசமான வளிமண்டலத்தைக்கொண்ட நகரங்களின் வரிசையில் இவற்றையும் சேர்த்திருக்கிறது.

இது, நாம் இதுவரை கண்டிராத மிகப்பாரிய காட்டுத்தீ என்றே பல நிபுணர்களும், விஞ்ஞானிகளும் தீயணைப்புத்துறையோடு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் கருதுகிறார்கள். NSW Director of Rural Fire Service, David Bowman, Director of the Fire Centre- University of Tasmania, Ross Bradstock- Head- University of Wolongong- Centre for Environmental Risk Management of Bushfires என்று பலரும், ‘ இதைப்போன்ற ஒரு பெருங்காட்டுத்தீ இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை’ என்றே கூறுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளின் கருத்துக்கள், குறிப்பாக ஆளுங்கட்சியைச்சேர்ந்த அரசியல்வாதிகளின் கருத்துக்கள் முரண்பட்டதாய் இருக்கின்றன. ‘We have had these smokes and hazes before, we had bushfire before’ என்ற ரீதியிலேயே, பிரதமர், மற்றும் துணைப்பிரதமர் ஆகியோரது கணிப்புக்கள் இருக்கின்றன. அரசியல் காரணங்களுக்காக, நிலைமையின் தீவிரத்தை அவர்கள் ஒத்துக்கொள்ளத்தயங்குகிறார்கள்.
காட்டுத்தீ எப்படி ஏற்படுகிறது?
சுமார் 40 சதவீதமான காட்டுத்தீ lightening என்ற மின்னலின் தாக்கத்தால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எஞ்சியவற்றுக்கு மனிதரே, அல்லது மனிதர்களால்நிறுவப்பட்ட நிலையங்கள், கருவிகள் மற்றும் உபகரணங்களே காரணம் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது.
காடுகளை ஊடறுத்துச்செல்லும் power lines கள் மூலமாக ஏற்படக்கூடிய arcing என்ற மின்வளையம் காரணமாக காடுகளில் தீ பற்றுகிறது.
விவசாய தேவைகளுக்காக நிலம் எரிக்கப்படும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போவதுண்டு.
விவசாய மற்றும் சுரங்கத்தொழில்களுக்குத்தேவையான உபகரணங்களை grinding, sharpening, welding என்ற முறைகளில் ஆயத்தப்படுத்தும் போது spark என்ற தீப்பொறி சிதறல் காரணமாகத் தீ பற்றுதல்.
காடுகளுக்கு ஊடாகச் செல்லும் ரயில்வே தண்டவாளங்களில் வேகமாகச் செல்லும் ரயில்களின் இரும்புச்சக்கரங்கள் உண்டாக்கும் spark தீப்பொறி அருகாமையில் இருக்கும் உலர்ந்த புற்களில் பற்றிக்கொள்ளுதல்.
மனிதரின் camping நடவடிக்கைகள் காரணமாக பரவக்கூடிய தீ, எரியும் சிகரட் துண்டுகள், அணைக்கப்படாத தீக்குச்சி என்பன காரணமாக தீ பற்றுதல்.
Back burning அல்லது controlled burnning என்ற முறையில், தீயைக்கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது தீயைக்கட்டுப்படுத்த முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள்.
இங்கு குறிப்பிடப்பட்ட காரணிகளைச் சுருக்கமாகப் பார்த்தால், எரிபொருள் (பற்றி எரியத் தேவையான உலர்ந்த தா வரப்பகுதிகள்), ignition source என்ற ஆதாரத்தீ, oxygen (பிராணவாயு) என்பவை ஒன்றிணையும்போது தீ ஏற்படுகிறது.

இப்படிப் பற்றும் தீ வேகமாகப் பரவக் காரணம் என்ன?
எரிபொருள் அளவு (fuel load), எரிபொருள் உலர்தன்மை (fuel moisture), காற்றில் உள்ள ஈரப்பதன் (humidity), காற்றின் வேகம், காற்று வீசும் திசை, நிலவும் வெப்பநிலை, தீ பரவும் கோணம் (slope) என்பன தீ பரவும் வேகத்தைத் தீர்மாணிக்கும் காரணிகளாக இருக்கின்றன.
Fuel load எரிபொருளின் அளவு: Driest year on record என்ற வரலாறு காணாத, மழையற்ற வருடம் ஒன்றை நாம் கடந்து வந்திருக்கிறோம். இதனால், காட்டின் மடியில் உதிர்ந்த இலை தழைகள், காய்ந்த புற்கள், பட்டுப்போன செடி கொடிகள், மரங்கள், உலர்ந்த மரப்பட்டைகள் என்று ஏராளமான எரிபொருள் நிறைந்து கிடக்கின்றன.
Fuel moisture எரிபொருளின் ஈரப்பதன்: தொடர்ச்சியான வறட்சியும் அதிகரித்த வெப்பநிலையும் காரணமாக இந்த எரிபொருட்களில் ஈரப்பதன் அறவே இல்லை. கடுங் கோடை காரணமாக வெப்பநிலை சராசரியாக 41.9 பாகை செல்சியஸ் ஆக இருப்பதால், இந்த எரிபொருள் மிகுந்த உலர் நிலையிலேயே இருக்கிறது.
Speed of the wind காற்றின் வேகம்: வேகமாக வீசும் காற்று, புதிய எரிபொருள் உள்ள இடத்திற்கு தீயை வேகமாக கடத்துகிறது. வேகமாக வீசும் காற்று, தீ எரிவதற்குத்தேவையான oxygen பிராணவாயுவைத் தாராளமாக வழங்குகிறது. வேகமாக வீசும் காற்று தீப்பொறிகளை சுமந்து சென்று தூர இடங்களில் தூவி விடுகிறது. இதை spotting என்கிறார்கள். இந்த spotting 30 கி. மீ. தூரம்வரை தீப்பொறிகளைச் சுமந்து செல்ல வல்லது. தீ வேகமாகப் பரவிவரும் இடங்களில், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது என்று சொல்லப்படுகிறது.
Direction of the wind காற்றின் திசை: காற்று காடுகள் உள்ள திசை நோக்கி வீசுகிறதா அல்லது வெட்டவெளி நிலப்பரப்பை நோக்கி வீசுகிறதா என்பதைப் பொறுத்து தீ பரவும் வேகம் அமைகிறது.
Temperature வெப்பநிலை: சுற்றாடலில் உள்ள வெப்பநிலைக்கு அமைவாக எரிபொருள் உலர்ந்தும், சூடாகவும் இருக்கும். தீ எளிதாகப்பற்றிக்கொள்ளும்.
Humidity காற்றின் ஈரப்பதன்: காற்றில்உள்ள ஈரப்பதன் குறையக் குறைய தீ வேகமாகப் பரவும்.
Slope angle சரிவின் கோணம்: குன்றுகளை நோக்கி எரிந்து பரவும் தீ வேகமாகப் பரவும். மலைச்சரிவை நோக்கிப்பயணிக்கும் தீ மெதுவாகப் பரவும். சமதரையில் தீ பரவும் வேகத்தைவிட ஒவ்வொரு 10 பாகை உயரம் அதிகரிக்கும்போதும், தீ பரவும் வேகம் அதிகரிக்கும்.

காட்டுத்தீ ஏற்படுவதற்கும், global warming என்ற புவிவெப்பம் அதிகரிப்பதற்கும் தொடர்பு உண்டா?
நமது நாட்டைப் பொறுத்த அளவில் புவிவெப்பம், கடந்த 100 ஆண்டு காலப்பகுதியில் 1 பாகை செல்சியஸ் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. குறிப்பாக இந்த அதிகரிப்பு1950 ஆண்டுக்குப்பின்னரே ஏற்பட்டிருக்கிறது. இதே போல global warming என்ற புவி வெப்பம் அதிகரித்து வருவது ஒரு சர்வதேச பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு green house gas emissions என்ற carbon di oxide வாயு மற்றும் methane, nitrous oxide போன்ற வாயுக்களே காரணம் என்பது விஞ்ஞானிகளின் முடிவு.
மின் உற்பத்தி நிலையங்கள் நிலக்கரியை எரித்து energy என்ற ஆற்றலைப் பெறுகிறபோது, carbon என்ற கரியமில வாயு வெளியேறுகிறது. இது oxygen என்ற பிராணவாயுவுடன் கலக்கும்போது, carbon di oxide ஆக மாறுகிறது. காடுகளுக்கு தீ வைக்கும்போதும் ஆலைகள் இயங்கும்போதும், வாகனங்கள் இயங்கும்போதும் பெருமளவில் carbon di oxide பசுமை இல்ல வளிமத்தை (green house emissions) உமிழ்கின்றன. புவி உஷ்ணம் அதிகரிப்பதன் காரணமாக காட்டுத்தீ ஏற்படுவதில்லை. ஆனால், இதன் காரணமாக காட்டுத்தீ வேகமாகப் பரவுவதற்கும் கட்டுப்படுத்த முடியாமல் போவதற்குமான சூழல் உருவாகிறது.

Climate change-காலநிலைமாற்றம் தொடர்பாக நமது அரசின் நிலைப்பாடு என்ன?
நமது நாட்டின் பொருளாதாரம் பிரதானமாக நாம் ஏற்றுமதி செய்யும் கனிம ப் பொருட்களான நிலக்கரி, natural gas என்ற வாயு, iron ore என்ற இரும்புத்தாது என்பவற்றிலேயே தங்கியிருக்கிறது. இன்று நாம் அனுபவிக்கும் standard of living வாழ்க்கைத்தரம், நாட்டின் பொருளாதார சுபீட்சம் காரணமாக க் கிடைக்கப்பெற்றது. ஆகவே global. Warming என்பது சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதைத் தாண்டி ஒரு அரசியல் பொருளாதாரப் பிரச்சனையாகவே பார்கப்படுகிறது. இதன் காரணமாக, conservative என்ற பழமைவாத த்தை பின்பற்றும் நமது அரசு green house gas emissions எனபதையும் இதன் காரணமாக புவி வெப்பம் அதிகரிக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. அத்தோடு, சுரங்கத் தொழில்களில் முதலீடு செய்துள்ளோரின் அரசியல் செல்வாக்கு மற்றும் அவர்கள் தரும் அழுத்தங்கள் என்பனவும் அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாகின்றன. 2013இல் பதவியிலிருந்த தொழிற்கட்சி அரசு கொண்டுவந்த carbon tax குறிப்பிடத்தக்க பலனைத் தந்ததை யாவரும் அறிவர். இதன்காரணமாக green house gas emission 1.4 சதவீதம் வீழ்ச்சியடைந்தது; carbon emission இல் 17மில்லியன் டன் வீழ்ச்சி ஏற்பட்டது.
ஆனால் 2013 தேர்தலில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ‘axe the tax’ என்ற ஆயுத த்தை லிபரல் கட்சி( Tony Abbott) கையில் எடுத்துக்கொண்டது. இதற்கு சுரங்க முதலாளிகள் பெரும் அளவில் ஆதரவை வழங்கினார்கள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் வித்தையைக் கற்றவர்கள் அரசியல்வாதிகள். இது அவர்களுக்கு தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்தது. நடந்து முடிந்த தேர்தலின்போது, முன்னாள் பிரதமர் Tony Abbott தனது தொகுதியில் பின்தங்கியிருந்த நிலையில், ‘கால நிலை மாற்றத்திற்கு பசுமை இல்ல வளிம உமிழ்வு ஒரு காரணம் தான்’ என்று ‘பல்டி’ அடித்ததும் ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்று வாக்காளர்கள் அவரை நிராகரித்ததும் நாம் அறிந்ததுதான்.

தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வருமா?
தற்போதைய கால நிலையையும் அடுத்த சில மாதங்களுக்கான எதிர்வு கூறப்படும் காலநிலைகளையும் அடிப்படையாக வைத்துப்பார்க்கும்போது, விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும் சாத்தியங்கள் இல்லை என்றே Bureau of metrology ஐச் சேர்ந்த டாக்டர் Karl Braganza கூறுகிறார்.
இதைத்தவிரவும், தீ பரவும் வேகத்துக்கு ஈடு கொடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரத் தேவையான போதுமான resources வளங்கள் இல்லாத நிலையே நிலவுகிறது. இந்த வளங்கள் தொடர்பான திட்டமிடல், நடைமுறைப்படுத்துதல் என்பன பல வருடங்களுக்கு முன்னதாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இருந்தபோதும் மத்திய, மாநில அரசுகள் பெருமுயற்சி எடுத்து வருகின்றன. மத்திய அரசு 2பில்லியன் டாலர்களையும் NSW மாநில அரசைப் பொறுத்த அளவில் 1பில்லியன் டாலர்களையும் இதற்காக ஒதுக்கியிருக்கின்றன. செல்வந்தர்கள் பெருமளவில் நிதி வழங்கியிருக்கிறார்கள். அமெரிக்கா, நியுஸிலாந்து போன்ற நாடுகள் தேவையான தீயணப்பு உபகரணங்களை தந்துதவ முன்வந்துள்ளன. முன்னரங்கில் இருந்து போராடும் தீயணப்புப் படை வீர்ர்கள், தன்னார்வ தீ அணைப்பு படையினர் ஆகியோருக்கு உதவியாக இராணுவமும் இணைந்திருக்கிறது.
காட்டுத்தீ - ஸ்காட் மரிசன் அரசுக்கு ஒரு ‘அக்னிப் பரீட்சை’

