நாடெங்கிலும் இடம்பெற்ற காட்டுத்தீயினால் அழிவடைந்த கட்டங்கள் குறித்த காப்பீட்டு கோரிக்கை குறைந்தது 60 கோடி டொலர்களை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை மிகச்சரியானது அல்ல என்றும் தீயினால் அழிவடைந்த பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் குறைந்தளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கலாம் அல்லது காப்பீடு இல்லாமலும் இருந்திருக்கலாம் என்றும் ஆகவே இந்தத்தொகை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் நாடெங்கிலும் இடம்பெற்றுவரும் காட்டுத்தீ அனர்த்தத்தினால் சுமார் 1300 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், கிறிஸ்மஸிற்கு பிறகு இடம்பெற்ற பிந்திய அழிவுகள் இதில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ்மஸ் வரையில் நியூ சவுத் வேல்ஸில் 789 வீடுகளும் தெற்கு ஆஸ்திரேலியாவில் 86 வீடுகளும் குயின்ஸ்லாந்தில் 40வீடுகளும் எரிந்து நாசமாகியுள்ளன. விக்டோரியாவில் அண்மையில் சுமார் ஏழு லட்சத்து 66 ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவுடைய நிலப்பகுதி எரிந்துள்ளது. இதில் 60 வீடுகள் Gippsland-இல் மாத்திரம் எரிந்துபோயுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய காப்புறுதி சம்மேளம் தங்களிடம் கிடைத்துள்ள காப்பீட்டு விண்ணப்பங்கள் குறித்து கூறும்போது - இதுவரையில் 29 கோடி 70 லட்சம் டொலர் காப்பீட்டுக்கான நாலாயிரத்து 299 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற Black Saturday தீயின்போது 2000 வீடுகள் எரிந்து நாசமானதும் 173 பேர் கொல்லப்பட்டதும் 170 கோடி பெறுமதியான சொத்துக்கள் இழக்கப்பட்டதும் குறிப்பட்டத்தக்கது.
