எந்தவொரு நோய்த் தொற்று பரவினாலும் அதுபற்றிய தவறான தகவல்களும் பரவுகின்றன என்பது வருத்தகரமான உண்மை. அந்தவகையில் கொரோனா வைரஸ் கோவிட்-19 பற்றிய பல மூடநம்பிக்கைகள் தொடர்ந்தும் உலாவருகின்றன. அவற்றில் சில இவை.
சூடான தண்ணீரில் குளித்தால் கொரோனா வைரஸ் போய்விடும்.

Source: Shutterstock
சூடான தண்ணீரில் குளித்தால் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பது பொய். உண்மையில் அதிக சூடான நீரில் குளித்தால் அது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
குளிர்ந்த காலநிலை, பனிப்பொழிவு கொரோனா வைரஸை கொல்லும்.
குளிர்ந்த காலநிலை, பனி ஆகியவற்றால் கொரோனா வைரஸை அழிக்க முடியாது. வெளிப்புற வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் மனித உடலில் இயல்பான வெப்பநிலை இருக்கும். ஆதலால், குளிர்ந்த காலநிலை, பனியால் கொரோனா வைரஸ் சாகாது.
சூரியனிலிருந்து வெளியாகும் UV கதிர்கள் கொரோனா வைரஸை அழிக்கும்.
சூரியனிலிருந்து வெளியாகும் UV கதிர்கள் சில வைரஸ்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என சிறியளவிலான ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றபோதும், கொரோனா வைரஸை இதனால் அழிக்க முடியும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.

Source: Supplied
உடலில் மதுபானம் அல்லது குளோரினைத் தெளிப்பதன் மூலம் கொரோனா வைரஸைக் கொல்ல முடியும்.
உடலில் மதுபானம் அல்லது குளோரினைத் தெளித்தால் கொரோனா வைரஸைக் கொல்ல முடியாது. அவ்வாறு ஏதாவது செய்தால் அது உடுத்தும் ஆடைக்கும், தோல் பகுதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சுடுநீர், எலுமிச்சை கலந்த நீர் மற்றும் மதுபானம் போன்றவற்றை அருந்துவதால் கொரோனா தொற்றிலிருந்து தப்பலாம்.
இல்லை. சுடுநீர் மற்றும் எலுமிச்சை கலந்த நீர் பருகுவதால் உங்கள் தொண்டைவலி குறையக்கூடும். ஆனால் வைரஸை இது கொல்லாது. மதுபானம் அருந்துவதால் கொரோனா வைரஸ் கொல்லப்படாது. மாறாக வேறு நோய்கள் உங்களுக்கு ஏற்படும்.
கொரோனா வைரஸ் இளம் வயதினரைத் தாக்காது.
இது தவறு. கொரோனா வைரஸ் மூலம் அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம். ஆனால், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். உதாரணமாக ஆஸ்துமா, நீரிழிவு, இதய நோய், இரத்தக்கொதிப்பு ஆகிய நோய்களுக்கு மருந்து, மாத்திரை சாப்பிடுபவர்கள் எளிதாகப் பாதிக்கப்படுவார்கள்.

Source: SBS Food
வெள்ளைப் பூண்டு, மஞ்சள் சாப்பிடுவதால் கொரோனா வைரஸைத் தடுக்க முடியும்.
உடலுக்குச் சத்தானது வெள்ளைப் பூண்டு. மஞ்சளுக்கு கிருமிகளை கொல்லும் தன்மை இருக்கிறது என்று அறியப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றின் மூலம் கொரோனா வைரஸைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
உடலுக்குச் சத்தானது வெள்ளைப் பூண்டு. மஞ்சளுக்கு கிருமிகளை கொல்லும் தன்மை இருக்கிறது என்று அறியப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றின் மூலம் கொரோனா வைரஸைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
Mouthwash வாங்கி அடிக்கடி வாய் கொப்புளித்துக்கொண்டே இருந்தால் அல்லது நிறைய நீர் அருந்தினால் கொரோனா தொற்று ஏற்படாது.
இதனை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் ஒருவர் நிறைய நீர் அருந்துவது உடல் நலத்திற்கு மிக அவசியமானது.

Source: iStockphoto
5G மொபைல் வலையமைப்பு, நோயெதிர்ப்பு சக்தியை குறைவடையச் செய்து கொரோனா வைரஸ் தொற்றை ஏற்படுத்தும்.
கொரோனா வைரஸூக்கும் 5G மொபைல் வலையமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 5G கதிர்வீச்சுக்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதற்கான சக்தி இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை.
மலேரியாவுக்கான தடுப்பு மருந்து hydroxychloroquine கோவிட் 19-ஐ குணப்படுத்தும்
இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. Hydroxychloroquine கொரோனா வைரஸ் மீது பாதிப்பை ஏற்படுத்துவதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளபோதும் மற்றைய ஆய்வு முடிவுகள் இதனை நிராகரிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் Hydroxychloroquine மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?

Source: Pexels
- சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்.
- உங்கள் கைகளை சோப்பு பயன்படுத்தி தண்ணீரில் அடிக்கடி கழுவுங்கள்.
- இருமும்போதும் தும்மும்போதும் tissue ஒன்றைப் பயன்படுத்திவிட்டு அதனை குப்பைத்தொட்டிககுள் வீசுங்கள். alcohol-based hand sanitiser-ஐ பயன்படுத்துங்கள்.
- உங்களுக்கு உடல்நலமில்லை என்றால் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருங்கள்.
- மற்றவர்களிடமிருந்து தள்ளியிருங்கள்.(1.5 மீட்டர் இடைவெளியைப் பேணுங்கள்)
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
