SKIP TO MAIN CONTENT

சீமெந்து குழைக்கும் வாகனத்தின் கீழ் அகப்பட்டு சிட்னியில் மூதாட்டி பலி!

Facebook
Vijay Maharaj and Gangotri Maharaj Source: Facebook

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

கணவரின் கையைப்பிடித்தவாறு வீதியை கடந்துகொண்டிருந்த மூதாட்டி ஒருவர் சீமெந்து குழைக்கும் வாகனத்தினால் மோதுண்டு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று சிட்னியில் இடம்பெற்றுள்ளது.

சிட்னி பகுதியில் முன்வாக்களிப்பில் கலந்துகொண்டுவிட்டு வீடுநோக்கி வந்துகொண்டிருந்த 83 வயது மூதாட்டியான கங்கோத்ரி மகாராஜ்  என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

சிட்னி Crows Nest பகுதியிலுள்ள Willoughby வீதியில்  இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொண்ட விஜய் மகராஜ் - கங்கோத்ரி மகாராஜ் தம்பதிகள் நேற்றைய தினம் முன்வாக்குப்பதிவில் சென்று கலந்துகொண்டுவிட்டு வீடு நோக்கி நடந்துவந்துகொண்டிருந்துள்ளார்கள். Crows Nest பகுதியில் Willoughby வீதியை கடந்துகொண்டிருந்தபோது அப்பகுதியால் வந்த சீமெந்து குழைக்கும் வாகனம் ஒன்று இடப்பக்கமாக திரும்பியிருக்கிறது. காங்கோத்ரி வாகனத்தில் மோதுண்டு அதன் சில்லின் கீழ் அகப்பட்டுவிட்டார். விபத்து நடந்தது தெரியாமல் வாகனச்சாரதி சுமார் 50 மீற்றர்களுக்கு வாகனத்தின் கீழ் அகப்பட்ட மூதாட்டியை இழுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

சம்பவத்தை நேரில் கண்ட பாதசாரிகள் வாகனத்தை கலைத்துச்சென்று நிறுத்தியபோதுதான் ஓட்டுனருக்கு சம்பவம் குறித்து தெரியவந்து வாகனத்தை நிறுத்தியிருக்கிறார். மனைவியை கையில் பிடித்துக்கொண்டு வீதியைக்கடந்துகொண்டிருந்த விஜய் மகராஜ் சில்லுக்குள் அகப்பட்டு இழுபட்டுக்கொண்டு சென்ற மனைவியை மீட்பதற்கு கடுமையாக போராடியிருக்கிறார். இருந்தாலும் அவரது முயற்சி பலிக்கவில்லை.

சம்பவ இடத்துக்கு உடனடியாக அவசர சேவைகள் அழைக்கப்பட்டபோதும் கங்கோத்ரியை காப்பாற்றமுடியவில்லை. விஜய் மகராஜ் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்தவாரம் தனது தாயார் 83 வயது பிறந்த தினத்தை கொண்டாடினார் என்று சம்பவம் தொடர்பாக கண்ணீர் மல்க தெரிவித்த அவரது மகள், இந்த வாரம் தனது பெற்றோரின் 61 ஆவது திருமண நிறைவுநாள் என்றும் குறிப்பிட்டார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now