ஆஸ்திரேலியாவில் சென்டர்லிங்கிடம் பொய்சொல்லி உதவித்தொகை பெறுபவர்கள் அதிகமாக வாழும் பகுதியாக மெல்பேர்னின் Werribee பிரதேசம் இனங்காணப்பட்டுள்ள நிலையில், Werribee மற்றும் Sunshine பகுதிகளில் உள்ள சென்டர்லிங்க் அலுவலகங்களில் பொலிஸார் மற்றும் Department of Human Services உத்தியோகத்தர்கள் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான சென்டர்லிங்க் வாடிக்கையாளர்களிடம் சோதனை நடத்தி அவர்களை கையுங்களவுமாகப் பிடிப்பதே குறித்த உத்தியோகத்தர்களின் நோக்கமாகும்.
ஆஸ்திரேலியா முழுவதும் 19 இடங்களில் இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவற்றில் சென்டர்லிங்கை ஏமாற்றுபவர்கள் அதிகம் வாழும் பகுதியாக Werribee-யே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை Werribee-இல் சென்டர்லிங்க் திட்டத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக பணம் பெற்றுக்கொண்டிருப்பவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அது தொடர்பில் Pacific Werribee Shopping Centre-இல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளிடம் துப்புக் கொடுக்கலாம் என Human Services அமைச்சர் Michael Keenan கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோன்ற அதிரடி சோதனை நடவடிக்கை கடந்த 2015 ம் ஆண்டு Werribee பகுதியில் மேற்கொள்ளப்பட்டபோது சென்டர்லிங்க் கொடுப்பனவுக்கு தகுதிபெறாத 2600 பேரிடமிருந்து 11 மில்லியன் டொலர்கள் பணத்தை அரசு மீளப்பெற முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
