சிட்னி ஒலிம்பிக் பார்க் பகுதியில் அமைந்துள்ள Opal Tower அடுக்குமாடி குடியிருப்பு உடைந்துவிழக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு பொறியியலாளர்கள் மற்றும் கட்டட முகாமையாளர்கள் மேற்கொண்ட சோதனையில், குறிப்பிட்ட அடுக்குமாடிக்குடியிருப்பில் 51 குடியிருப்புக்கள் பாதுகாப்பு உகந்தவை அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தினத்துக்கு முதல்நாளன்று மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இந்த செய்தியினால், அடுக்குமாடி குடியிருப்புக்களினால் நிரம்பியிருக்கும் சிட்னி நகர் அதிர்ந்துபோனது.
ஒலிம்பிக் பார்க் பகுதியில் அமைந்துள்ள 38 அடுக்குகளைக்கொண்ட Opal Tower அடுக்குமாடி கட்டடத்தில் 392 குடியிருப்புக்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட குடியிருப்புக்களிலிருந்து வெளியான வித்தியாசமான சத்தமும் வேறு அசாதரண காரணங்களும் அங்கிருந்தவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த, அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பிரகாரம் அங்கிருந்த அனைத்து மக்களும் வெளியேற்றப்பட்டு, முழுமையான சோதனை நடத்தப்பட்டது.
இதன்பிரகாரம், தற்போது 51 குடியிருப்புக்கள் பாதுகாப்புக்கு உகந்தவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை திருத்தி மீளமைப்பது தொடர்பாக குறிப்பிட்ட கட்டடத்தின் நிர்வாகம் காப்புறுதிக்கூட்டுத்தாபனத்துடன் பேச்சு நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, குடியிருப்பு பகுதிக்கு உடனடியாக விரைந்த அவசர சேவைப்பிரிவினர், குடியிருப்பாளர்களுக்கு உரிய உதவிகளை வழங்கியதுடன், உடனடியான ஆபத்துக்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து சென்றுள்ளனர்.
Share
