சிட்னிக்கும் மெல்பேர்னுக்கும் இடையில் 40 நிமிடங்களில் பயணிக்கக்கூடிய Hyperloop Transportation அதிவேக ரயில் சேவையை ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையில் நிர்மாணிப்பது குறித்த யோசனை மீண்டுமொரு தடவை ஆஸ்திரேலிய அரசின் பரிசீலனைக்கு முன்வைக்கப்படவுள்ளது.
சிட்னிக்கும் மெல்பேர்னுக்கும் இடையில் 40 நிமிடங்களிலும் மெல்பேர்னுக்கும் கன்பராவுக்கும் இடையில் 23 நிமிடங்களிலும், கன்பராவுக்கும் சிட்னிக்கும் இடையில் 14 நிமிடங்களிலும், சிட்னிக்கும் குயீன்ஸ்லாந்துக்கும் இடையில் 37 நிமிடங்களிலும் பயணம் செய்யக்கூடிய வகையிலான இந்த அதிவேக ரயில் சேவையை ஆஸ்திரேலியாவில் நிர்மாணிப்பது குறித்து Hyperloop Transportation Technologies நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசுக்கு யோசனை வழங்கியபோதும், இந்தப்பயண முறையை நிர்மாணிப்பதில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் மற்றும் பொருளாதார இடர்களை காரணம் காண்பித்து பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே கைவிடப்பட்டது.
ஆனால், இந்த சேவையை வழங்கும் Hyperloop Transportation Technologies நிறுவனமானது தற்போது மீண்டும் ஆஸ்திரேலியா அரசுடன் இது தொடர்பிலான பேச்சுக்களை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
தரைவழியாக மணிக்கு 1223 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் Hyperloop ரயில் சேவை இதுவரை உலகில் எங்கும் அறிமுகப்படுத்தப்படவில்லை. பிரான்ஸில் மாத்திரம் சிறியளவில் சோதனை முயற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட 320m சேவை இன்னமும் பயன்பாட்டிலிருந்து வருகிறது. ஆனால், பெரியளவில் - பயணிகள் போக்குவரத்துக்கு - உகந்தளவில் உலகின் எந்தப்பாக்கத்திலும் இன்னமும் இந்த ரயில் சேவை அறிமுகத்துக்கு வரவில்லை. ஆஸ்திரேலியாவில் இதனை மேற்கொள்வது குறித்து Hyperloop Transportation Technologies நிறுவனம் விருப்பம் தெரிவித்திருக்கிறது.
இந்த ரயில் சேவை குழாய் வழியாகவே மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது என்ற காரணத்தினாலும் வளைவுகளற்ற - நேரடியான - பாதையில்தான் நிர்மாணிக்கப்படவேண்டியது என்பதனாலும் குறுக்காக விலங்குகள் பாய்ந்துவிடாமலிருப்பதற்கு பயணக்குழாயின் இரு பக்கங்களிலும் வேலி அமைப்பதற்கு மாத்திரம் 2 பில்லியன் டொலர் செலவிடவேண்டியிருக்கும் என்று Hyperloop Transportation Technologies நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த சேவை முற்றுமுழுதாக சூரிய ஒளியில் இயங்குவதாகும்.
ஆஸ்திரேலியாவின் பிரதான நகர்களில் நிரம்பி வழியும் சனத்தொகையின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள போக்குவரத்தினை சீர்படுத்துவதற்கு இந்த சேவை மிகப்பெரிய தீர்வாக அமையும் என்றும் பொருளாதார ரீதியாகவும் வேகமாக இயங்கும் உலகின் தேவைகளுக்கு இணையாக போட்டிபோடுவதற்கு இந்த ரயில் சேவை மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றும் பொருளாதார நிபுணர்கள் இந்த சேவை குறித்து கருத்து தெரிவிக்கும்போது கூறியுள்ளார்கள்.
Share
