சிட்னியில் தனது முன்னாள் காதலியை படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படும் பல்மருத்துவர் , கொலையை செய்துமுடித்தபின் வெளியில் சென்று கழிவறையை சுத்திகரிக்கும் தூள், கையுறைகள் மற்றும் சுத்திகரிப்பு கடதாசிச்சுருள் ஆகியவற்றை வாங்கி வந்தமை கமராவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலுள்ள அங்காடியில் சென்று புதிய சூட்கேஸ் ஒன்றை வாங்கி வந்துள்ளமையும் CCTV கமரா மூலம் தெரியவந்திருப்பதாக Daily Mail ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட சிட்னி பல்மருத்துவர் ஹர்ஷா தனது முன்னாள் காதலியை ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று கொலைசெய்துவிட்டு, அடுத்தநாள் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தி தானும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க விசாரணைகளிலிருந்து சில தகவல்கள் வெளியாகியுள்ளபோதும் இருவரும் இறந்துவிட்ட காரணத்தினால், இது தொடர்பான முழுமையான விசாரணைகளை பொலீஸார் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்கள்.
சம்பவம் இடம்பெற்ற அன்று பல்மருத்துவர் ப்ரீத்தி ரெட்டியை, ஹர்ஷா தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச்சென்று கொலை செய்த பின்னர், கொலைசெய்த இடத்தை துல்லியமாக சுத்தம் செய்வதற்காக வெளியில் சென்று சுத்திகரிப்பு பொருட்களை கொள்முதல் செய்திருக்கிறார் என்றும் - அடுத்தநாள் ஹோட்டல் அறையை சுத்திகரிப்பதற்காக வரும் ஹோட்டல் தொழிலாளர்கள் இரத்தக்கறைகள் எதையும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக மிகநேர்த்தியான முறையில் கறையெதுவுமில்லாமல் தடயங்களை சுத்திகரிப்பு செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அதன்பின்னர்தான், கொலையுண்ட சடலத்தை சூட்கேஸினுள் அடைத்து ஹோட்டல் வாசலில் வைத்துவிட்டு, ப்ரீத்தியின் காரை எடுத்துவந்து ஹோட்டல் காவலாளியின் உதவியோடு அந்த சூட்கேஸினை காரினுள் ஏற்றியிருப்பதாகவும், தான் பல பொருட்களை கொள்முதல் செய்த காரணத்தினால், சூட்கேஸ் மிகுந்த எடையுடன் காணப்படுவதாகவும் காவலாளிக்கு ஹர்ஷா காரணம் சொல்லியிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
