சிட்னி பல்வைத்தியவர் ப்ரீத்தி மரணம் தொடர்பாக வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்தும் மர்மம் நிறைந்தவையாக காணப்படும் நிலையில், தற்போது வெளிவந்திருக்கும் செய்திகளின் அடிப்படையில் குறிப்பிட்ட படுகொலை சம்பவம் மார்ச் மாதம் 3 ஆம் திகதி காலை 11.06 மணிக்கும் பிற்பகல் 1.47 மணிக்கும் இடையில் நடைபெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
மார்ச் மாதம் 2 ஆம் திகதி சனிக்கிழமை இரவு தனது முன்னாள் காதலனோடு சிட்னி ஹோட்டலில் தங்கினார் என்று கூறப்படும் ப்ரீத்தி ரெட்டி, அடுத்த நாள் காலை 11.06 மணியளவில் தனது தந்தையுடன் தொடர்புகொண்டுள்ளார்.
தனது தொலைபேசியை "சார்ஜ்" செய்துகொண்டிருப்பதாகவும் அதன் பின்னர் காலையுணவை உட்கொள்ளப்போவதாகவும் கூறிய ப்ரீத்தி, சில மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் தகப்பனிடம் தனது தொலைபேசியிலிருந்து அழைத்துக்கூறியுள்ளார்.பின்னர், தற்போதைய காதலருக்கும் தனது தொலைபேசியில் தொடர்புகொண்ட ப்ரீத்தி அதே தகவலை தெரிவித்திருக்கிறார்.
அதன் பின்னர், 1.46 மணியளவில் ப்ரீத்தியின் கைத்தொலைபேசி செயலிழந்துள்ளது. அதற்குப்பிறகு, அவருடனான எந்தத்தொடர்பும் கிடைக்கவில்லை. தனது முன்னாள் காதலனோடு தங்கியிருந்த ஹோட்டலில் இருந்துதான் இந்த தொலைபேசித்தொடர்புகளை ப்ரீத்தி தனது தொலைபேசியிலிருந்து மேற்கொண்டுள்ளார் என்பது உறுதிசெய்யப்படுகின்றபோதும் இந்த தொலைபேசி உரையாடலை அவரது முன்னாள் காதலன் ஹர்ஷா ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தாரா என்பது தொடர்பாக எந்த தகவலும் தெரியவரவில்லை.
ஆனால், அதற்குப்பின்னர் ப்ரீத்தியை அவரது முன்னாள் காதலர் ஹர்ஷா பல இடங்களில் குத்திக்கொன்றுள்ளார் என்றும் இந்தக்கொலையில் ப்ரீத்தியின் முன்னாள் காதலர் ஹர்ஷாவைவிட வேறு எவரும் சம்பந்தப்பட்டதாக தாங்கள் நம்பவில்லை என்றும் பொலீஸார் கூறியுள்ளார்கள்.
ப்ரீத்தியின் சடலத்தை சூட்கேஸினுள் வைத்து பொதியாக ஹோட்டலின் வாசலுக்கு கொண்டுவந்துள்ளார் என்று நம்பப்படும் ப்ரீத்தியின் முன்னாள் காதலன் ஹர்ஷா, ப்ரீத்தியின் கார் முதல்நாள் இரவு தரித்துவிடப்பட்ட இடத்துக்கு சென்று காரை எடுத்து ஹோட்டலின் வாசலுக்கு வந்துள்ளார். அதுவரை ஹோட்டல் முன்வாசலில் சூட்கேசினுள் பொதி செய்யப்பட்ட நிலையிலிருந்த ப்ரீத்தியின் சடலத்தை ஹோட்டல் உதவியாளரின் உதவியுடன் ப்ரீத்தியின் காரில் ஏற்றியுள்ளார். சுமார் ஏழு கிலோ மீற்றர் தொலைவில் சென்று பொதுமக்கள் செறிந்து வாழும் பிரதேசமொன்றில் காரை நிறுத்திலிட்டு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர், அடுத்த நாள் காலை பொலீஸாரால் விசாரிக்கப்பட்ட பின்னரே மார்ச் 4 ஆம் திகதி திங்களிரவு 10 மணியளவில் ஹர்ஷா தனது காரில் சென்று வாகனம் ஒன்றுடன் மோதி தற்கொலை செய்திருக்கிறார் என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் பொலீஸாரின் விசாரணைக்குப் பின்னர் இந்தியாவிலிருக்கும் தனது சகோதரரை 10 தடவைகளுக்கு மேல் ஹர்ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ப்ரீத்தி படுகொலையாகி ஆறு நாட்களின் பின்னர் கடந்த வெள்ளிகிழமை சிட்னியில் அவரது இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.
ஆனால், ப்ரீத்தி படுகொலை தொடர்பாக அவரது முன்னாள் காதலன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முன்னாள் காதலன் ஹர்ஷாவின் பெற்றோர் முற்றாக மறுத்துள்ளார்கள்.
