சிட்னியில் நிலவும் தொடர்ச்சியான வரட்சியையடுத்து இன்று ஜூன் முதலாம் திகதியிலிருந்து நீர் உபயோகத்துக்கான கட்டுப்பாடு (water restriction) நடைமுறைக்கு வருவதாக நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிட்னிக்கு நீர் வழங்கும் குளத்தின் நீர்மட்டம் 50 வீதத்தினை எட்டும்போது எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்படுவது வழக்கம் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நீர்மட்டம் 53.5 வீதத்தை எட்டியுள்ளதுடன் வாரமொன்றுக்கு அரை வீதத்தினால் குறைவடைந்துகொண்டுவருவதும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இந்த அறிவிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைமுறைக்கு வரும் இந்த நீர் உபயோக கட்டுப்பாட்டின்படி, காலை 10 மணிக்கும் மாலை நான்கு மணிக்கும் இடையில் தோட்டத்துக்கு hose-குழாய் வழியாக தண்ணீர் பாய்ச்சுவது தடை செய்யப்பட்டுள்ளது. வாளிகளில் தண்ணீர் எடுத்து தோட்டத்துக்கு பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. நீர்க்குழாய்களின் உதவியோடு வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் கழுவுவதும் தடை செய்யப்படுகிறது. ஆனால், வாளிகளில் எடுக்கப்படும் தண்ணீர்கொண்டு மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிட்னியின் தண்ணீர் தேவை 85 சதவீதம் மழை நீரிலேயே தங்கியிருக்கின்ற சூழ்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாகவே தொடரும் வரட்சிநிலை பல வருடங்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு நீர் உபயோக கட்டுப்பாட்டிற்கு அரசாங்கத்தினை தள்ளியுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப பொதுமக்கள் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளும் வகையில் மூன்று மாதங்களுக்கு கட்டுப்பாட்டை மீறுவோருக்கான தண்டப்பணம் எதையும் அறவிடப்போவதில்லை என்றும் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் உபயோக கட்டுப்பாட்டை மீறும் தனியாரிடமிருந்து 220 டொலர்களும், வியாபார நிறுவனங்களிடமிருந்து 550 டொலர்களும் தண்டமாக அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



நீர் உபயோக கட்டுப்பாடு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு - https://www.sydneywater.com.au/SW/water-the-environment/what-we-re-doing/water-restrictions/index.htm
