SKIP TO MAIN CONTENT

சிட்னியில் கிறிஸ்தவர்கள் தங்கள் கல்லறை இடத்தை முஸ்லீம்களுக்கு தருகின்றனர்!

சிட்னியில் கிறிஸ்தவர்கள் தங்கள் கல்லறை இடத்தை முஸ்லீம்களுக்கு தருகின்றனர்!

Kazi Khalequzzaman and Peter O'Meara.
Source: SBS Bangla

1 min read

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS


Skip to article content

சிட்னியின் மக்கள் தொகை கூடிக்கொண்டிருப்பதால், இறக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது இயற்கைதான். ஆனால் சிட்னியில் வாழும் வீடுகளே குதிரைக் கொம்பு விலையில் விற்கும்போது, இறப்பவர்களை புதைக்க புதிதாய் இடத்திற்கு எங்கே போவது?

எரிப்பது எனும் வழக்கம் கொண்ட சமயங்களை சார்ந்த மக்கள் இந்த இட நெருக்கடியை சந்திப்பதில்லை. ஆனால் புதைப்பதை பழக்கமாகக்  கொண்ட சமய சிறுபான்மை மக்களான இஸ்லாம், ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள், ஆசியர்கள் இந்த புதைக்க புதிய இடம் தேவை எனும்  நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

இந்த பின்னணியில் இறந்தவர்களை புதைக்கும் நோக்குடன் முன்கூட்டியே திட்டமிட்டு அதிக நிலங்களை வாங்கி கல்லறைத்தோட்டமாக வைத்திருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்தின் சிட்னி மறைமாவட்டம் (Catholic Archdiocese of Sydney) முஸ்லீம்களுக்கு உதவ முன்வந்துள்ளது. குறிப்பாக, மேற்கு சிட்னி பகுதியிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ கல்லறைத்தோட்டத்திலிருந்து (Kemps Creek Catholic Cemetery in western Sydney) ஐந்து ஏக்கர் நிலத்தை முஸ்லீம் மக்களுக்கு வழங்க சிட்னி கத்தோலிக்க மறைமாவட்டம் முன்வந்துள்ளது. இந்த இடத்தில் சுமார் 5000 (ஐயாயிரம்) பேரை புதைக்க முடியும்.

இந்த நிலஒதுக்கீடு புரிந்துணர்வு திட்டத்தில் Catholic Metropolitan Cemeteries Trust அமைப்பின் இயக்குனர் Peter O'Meara வும், Riverstone Muslim Cemetery Board அமைப்பின் தலைவர் Kazi Khalequzzaman Ali யும் கையெழுத்திட்டனர். சமய புரிந்துணர்வுக்கும், இறந்தவர்கள் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனும் நோக்குடனும் தமது திருச்சபை முஸ்லீம்களுக்கு நிலம் வழங்க முன்வந்துள்ளது என்று Peter O'Meara கூறினார்.   

சமய நல்லிணக்கத்திற்கு இன்னொரு சான்றாக இருக்கும் இந்த செயல் மூலம், இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் முஸ்லீம்கள் புதைக்கும் இட நெருக்கடியை சந்திக்கமாட்டார்கள் என்று Kazi Khalequzzaman Ali அவர்கள் நமது SBS Bangla மொழி ஒலிபரப்பிடம் தெரிவித்தார்.     


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now