சிட்னியில் ஸ்கூட்டர் ஒன்றில் தனது மனைவி மற்றும் பேரன் ஆகியோரை ஏற்றிச்சென்ற இந்தியர் ஒருவருக்கு பல்வேறு வீதி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வடமேற்கு சிட்னியிலுள்ள The Ponds பகுதியில் வைத்து பொலிஸாரால் இடைமறிக்கப்பட்ட 67 வயது நபருக்கே இவ்வாறு கடும் அபராதம் விதிக்கப்பட்டது.
குறித்த நபர் ஸ்கூட்டரின் பின்புறம் தனது 59 வயது மனைவியையும், நடுவில் 6 வயதுப் பேரனையும் ஏற்றிக்கொண்டு சென்றிருந்த நிலையில் கீழ்க்காணும் 3 குற்றச்சாட்டுக்களின் பேரில் இவருக்கு தண்டம் விதிக்கப்பட்டது.
- குறித்த நபரின் மனைவி தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை- 344 டொலர்கள் அபராதம் மற்றும் 3 demerit புள்ளிகள். இதற்கு மேலதிகமாக தலைக்கவசம் அணியாத குற்றத்திற்காக மனைவிக்கும் 344 டொலர்கள் அபராதம்.
- 8 வயதுக்குக் குறைந்த ஒருவரை பாதுகாப்பாக பொருத்தப்பட்ட sidecar இல்லாமல் வெறுமனே ஏற்றிச்சென்றமை- 344 டொலர்கள் அபராதம் மற்றும் 3 demerit புள்ளிகள்.
- ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை ஸ்கூட்டரில் ஏற்றிச்சென்றமை-344 டொலர்கள் அபராதம் மற்றும் 3 demerit புள்ளிகள்.
இதேவேளை குறித்த நபர் சமீபத்தில்தான் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்ததாகவும் ஆஸ்திரேலிய வீதி விதிமுறைகள் தொடர்பில் அவர் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அவர் தனது இந்திய வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தையே பயன்படுத்தியிருந்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது.
